முக்கிய செய்திகள்:
ஏற்காடு தொகுதி பிரச்சாரத்தின்போது எந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளையோ, நிதியுதவிகளையோ அறிவிக்கவில்லை - தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்

ஏற்காடு தொகுதி பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்கு சாலை அமைப்பது, குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவது போன்ற எந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளையோ, நிதியுதவிகளையோ அறிவிக்கவில்லை என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை எனவும், பொதுவாக இத்தொகுதிக்குத் தேவைப்படும் திட்டங்கள் பற்றி மட்டுமே தாம் பேசியதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளரின் நேற்றைய தேதியிட்ட கடிதத்துடன், நேற்று மாலை 3.30 மணிக்கு தமக்கு கிடைத்ததாகவும், அதற்கான பதிலை தற்போது அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள நோட்டீஸில், புகார்தாரரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் சுட்டிக்காட்டியுள்ளார் - ஆனால், அந்த கடிதத்தின் 2-வது பத்தியில் இடம்பெற்றுள்ள புகார்களை வைத்து பார்க்கும்போது, அ.இ.அ.தி.மு.க.வின் அரசியல் எதிரியான தி.மு.க.தான் இந்தப் புகாரை அளித்துள்ளது என்பதை யூகிக்க முடிகிறது - ஏற்காடு தொகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்காக தாம் பிரச்சாரம் மேற்கொண்டபோது, புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின்போது பொதுமக்களிடையே தமிழில் பேசியதாகவும், கடந்த மாதம் 28-ம் தேதி தாம் நிகழ்த்திய எந்த உரைகளிலும், புதிய திட்டங்கள் குறித்து வாக்குறுதியோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்- தமிழகத்தில் 3-வது முறையாக தாம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பற்றி மட்டுமே சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் - ஏற்காடு தொகுதியில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மற்றம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் தாம் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார் - புதிய சுகாதார மையங்களை திறப்பது போன்ற பல்வேறு சமூக மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் குறித்து தாம் மறைமுகமாக குறிப்பிட்டதாக சொல்லப்படுவதை தாம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் - ஏற்காடு தொகுதி மேம்பாட்டுக்கு தேவையானவை பற்றி தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதை மட்டுமே தமது உரையில் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, இப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு என்னென்ன தேவையோ, அவை நிறைவேற்றப்படும் என்று பொதுவாக மட்டுமே தாம் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். தாம் பொதுவாக பேசிய விஷயத்தை, தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி தேவைகளுடன் தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட எந்த திட்டமும் நிறைவேற்றப்படும் என தாம் வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை என்றும், தமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தொகுதிக்கான திட்டங்கள் எதைப்பற்றியும், குறிப்பாக, தாம் எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்காடு தொகுதியில் வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன தேவையோ, அவற்றை அரசு நிறைவேற்றும் என பொதுவாக மட்டுமே பேசியதாகவும், எனவே, இதில் தேர்தல் நடத்தை விதி​மீறல் எதுவும் இல்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் தமிழில் ஆற்றிய உரை, ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்காது என முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தாம் எந்த குறிப்பிட்ட வாக்குறுதிகளும் அளிக்கவில்லை என்றும், "ஆளும் கட்சி-2" என்ற பத்தியின் கீழ் 6-வது துணைப் பத்தியை தாம் மீறவில்லை என மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாகவும், எனவே, இந்த பிரிவின்கீழ் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில், தமது உரையில் எந்த இடத்திலும், எந்த வடிவத்திலும் நிதி மானியம் எதையும் அறிவிக்கவில்லை என்றும், அல்லது, அதுபற்றிய வாக்குறுதியும் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சாலைகள் அமைப்பது, குடிநீர் வசதிகள் போன்றவற்றை வழங்குவது குறித்து வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பகுதியின் தேவைகள் மற்றும் அரசு இப்பகுதியின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியையும் இணைத்து, அதன் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் இக்கடிதத்தை எழுதியிருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, நோட்டீசில் உள்ள 4-வது பத்தியில் கண்டுள்ளபடி முடிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதையும் முதற்கண் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அதுவும், இரண்டு விஷயங்களை ஒன்றாக இணைத்து, இதுபோன்ற முடிவுக்கு வருவது வெறும் அனுமானமாகவும், சந்தேகமாகவும் மட்டுமே இருக்கும் என்றும், இது, சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்கீழ் வராது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தாம் தெரிவித்துள்ள இந்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள விளக்கம் கேட்கும் நோட்டீசுக்கு பதில் அனுப்பியுள்ளதையடுத்து, உத்தேச நடவடிக்கை எதையும் கைவிடுமாறு கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தமது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமது பெயர் தவறாக எழுதப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்