முக்கிய செய்திகள்:
மத்தியப்பிரதேசத்தில் பிற்பகல் வரை 26 சதவீதமும், மிசோரமில் 37 சதவீதமும் வாக்குப்பதிவு – ஹோஷங்காபாத், ரட்லம், குவாலியர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு

மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 26 சதவீத வாக்குப்பதிவும், மிசோரம் சட்டப்பேரவைக்கான தேர்தலில் 37 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், 2 ஆயிரத்து 583 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 40 இடங்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் 227 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் வரை மத்திய பிரதேசத்தில் 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள 8 மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட ஹோஷங்காபாத், ரட்லம், குவாலியர், ரைசென், உமரியா பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், சற்று தாமதம் ஏற்பட்டு பின்னர் புதிய இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள ஆயிரத்து 126 வாக்குச் சாவடிகளில், 94 வாக்குச் சாவடிகள் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில காவல்துறையினருடன் துணைராணுவப்படையினரும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிசோரம் மாநிலத்தில் பிற்பகல்வரை 37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர்கள் வாக்களித்தவுடன், தங்கள் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதிசெய்துகொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த முறை பயனுள்ளதாக இருப்பதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்