முக்கிய செய்திகள்:
டெல்லியில் இன்று அதிகாலை நான்கு முறை நேரிட்ட நிலநடுக்கம் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நேரிட்ட 4 நிலநடுக்கம் காரணமாக, வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள், பயத்தினால் சாலைகளிலேயே தஞ்சமடைந்தனர்.

தெற்கு டெல்லி பகுதியின் சைனிக் ஃபார்ம்ஸ் பகுதியில் இன்று அதிகாலை 12.41 மணியளவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில், 3.1ஆகப் பதிவானது. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு, சுமார் 4 விநாடிகள் நீடித்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உருவானதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிகாலை 1.41 மணியளவில், நொய்டா மற்றும் காசியாபாத் பகுதியிலும், ஹரியானா மாநிலத்தில் உள்ள மனேசார் பகுதியிலும் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவானது. இதையடுத்து, 1.55 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5ஆகவும், 3.40 மணியளவில் 2.8ஆகவும் பதிவானது. அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்களின் காரணமாக, பெரும்பாலான மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

மேலும் செய்திகள்