முக்கிய செய்திகள்:
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களையும், 63 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணைப் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இரண்டு சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 9 மீனவர்கள் இரண்டு படகுகளில் 1-ந் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அதில் ஒரு எந்திரப்படகு கடலுக்குள் மூழ்கிவிட்டது. அவர்களை மற்ற படகில் இருந்த மீனவர்கள் மீட்டனர்.

ஆனால் ஏற்கனவே துயரத்தில் இருந்த 9 மீனவர்களையும் அந்த படகோடு இலங்கை மீனவர்கள் கைது செய்து, கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுவிட்டனர். அங்கு அவர்கள் அனைவரும் 16-ந் தேதி வரை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக, 2-ந் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 6 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் சென்ற படகின் எந்திரம் திடீரென்று பழுதாகி கடலுக்குள் மூழ்கியது. இவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கரைநகரில் உள்ள கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2 மாதங்களில் 15 சம்பவங்களில் இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த 319 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களின் 62 மீன்பிடி படகுகளும் கொண்டு செல்லப்பட்டன. உங்கள் அரசு மேற்கொண்ட முயற்சியால் 319 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக 62 படகுகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து இலங்கை அரசின் காவலிலேயே வைக்கப்பட்டு இருக்கின்றன.

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வு, எனது அரசுக்கு உச்சபட்ச கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே இந்த நீண்டகால பிரச்சினையின் தீர்வுக்காக, உயர்மட்ட அளவிலான தலையீடு அவசியமாகிறது. எனவே நீங்கள் இந்த விஷயத்தை இலங்கையின் உயர்மட்ட அதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்கள் மற்றும் 63 மீன்பிடி படகுகள் உடனே விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்