முக்கிய செய்திகள்:
மின் திட்டம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காலதாமதம் செய்யப்படுவதாகவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறேன். எனது குற்றச்சாற்றுக்கள் உண்மையானவை என்பதை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்கு தணிக்கையாளர்(சி.ஏ.ஜி) அறிக்கை உறுதி செய்திருக்கிறது.அனல் மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்ட முறை குறித்தும், மின்திட்டப்பணிகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்ததை கண்டு கொள்ளாமல் இருந்தது குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் கடுமையான குற்றச்சாற்றுகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

வடசென்னை மற்றும் மேட்டூர் மின்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து ரூ.7418 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், ஒரு பைசா கூட அபராதமாக வசூலிக்கப்படவில்லை என்றும், அந்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் 82 விழுக்காட்டை தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் வழங்கிவிட்டதாகவும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றஞ்சாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த இரு மின்திட்டங்களையும் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக 2256 கோடி அலகுகள் (யூனிட்டுகள்) மின்னுற்பத்தி இழப்பு ஏற்பட்டதாகவும், இதை சமாளிக்க தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரம் வாங்கியிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் வடசென்னை மின்திட்டத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றையும் ஒதுக்கிவிட முடியாது. எனவே இதுகுறித்த அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசே ஆணையிட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராம தாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்