முக்கிய செய்திகள்:
ராஜ்நாத் சிங்குடன் டெல்லி பா.ஜ.க. தலைவர் சந்திப்பு

டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது. தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைக்காததால் பா.ஜ.க ஆட்சியமைக்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் சில மாதங்களிலேயே லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய காங்கிரஸ் அரசுடன் ஏற்பட்ட மோதலில் அவர் பதவி விலகினார். இதனையடுத்து, டெல்லி சட்டசபை குடியரசுத் தலைவரால் முடக்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அங்கு ஆட்சியமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டுக்காக பிரேசில் சென்ற பிரதமர் மோடி டெல்லி திரும்பியவுடன் அவருடன் கலந்து ஆலோசித்து விட்டு இதற்கான நடவடிக்கைகளில் இறங்க அக்கட்சி முடிவு செய்தது.

பா.ஜ.க.வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜகதீஷ் முக்கி முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் சமீபத்தில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 67 ஆக குறைந்துள்ளது.

தற்போது, பிரதமர் மோடி நாடு திரும்பி விட்டதையடுத்து, டெல்லியில் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க.வின் முடிவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

பா.ஜ.க.விடம் ஏற்கனவே, ஒரு லோனே அகாலி தளம் எம்.எல்.ஏ. உள்பட 28 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆதரவு தர தயாராக உள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது அதிருப்தியில் இருக்கும் மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, டெல்லி சட்டசபையின் பலம் 67 ஆக உள்ளதால் ஆட்சி அமைக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில் இந்த வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. சுறுசுறுப்பாக காய் நகர்த்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, டெல்லி பிரதேச பா.ஜ.க. தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள சதிஷ் உபாத்யாய், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்