முக்கிய செய்திகள்:
டெல்லி பல்கலைக்கழக பட்டப்படிப்பு வழக்கு உடனே விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் நான்கு ஆண்டு பட்டப் படிப்பை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இதை டெல்லி பல்கலைக்கழகம் ஏற்க மறுத்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு 54 ஆயிரம் இடங் களுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நான்காண்டு படிப் புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. யுஜிசி உத்தரவை ரத்து செய்து நான்காண்டு பட்டப் படிப்பை தொடர வேண்டும் என்று கூறி, டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆதித்ய நாராயண் மிஸ்ரா மனு தாக்கல் செய்தார். நான்காண்டு படிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிமன்ற நீதிபதிகள் பிரதிபா ராணி, காமேஸ்வர் ராவ் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘டெல்லி பல்கலைக்கழகத்தில் தற்போ துள்ள நிலைமை எங்களுக்குப் புரிகிறது. இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். விடு முறை கால நீதிமன்றத்தால் அதை செய்ய முடியாது. எனவே, வழக்க மான நீதிமன்ற விசாரணைக்கு ஒத்திவைக்கிறோம்’ என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே, 57 கல்லூரிகள் யுஜிசி உத்தரவை பின்பற்ற சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 54 ஆயிரம் இடங்களுக்கு 2 லட்சத்து 78 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து விட்டு காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே 4 ஆண்டு படிப்பில் சேர்ந்த 60 ஆயிரம் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் செய்திகள்