முக்கிய செய்திகள்:
பள்ளி கல்வித் துறைக்கு ரூ.17,732 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:,

2011–ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ரூ.10,660 கோடி அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 10,022 பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சிறப்பு சலுகைத் தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 53 ஆயிரம் ஏக்கர் நிலம் மேம்படுத்தப்படும். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை– தூத்துக்குடி தொழில் மேம்பாட்டு வழித்தடத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சிறப்பு செயலாக்க முகமை ஒன்று ஏற்படுத்தப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானிலும், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையிலும், இதுபோன்ற இரண்டு மையங்கள் அமைக்கப்படும்.குறுந்தொழில் குழுமங்களுக்கு ஆதரவளிக்கும் புதிய முயற்சியாக மூலப்பொருள் வங்கி, விற்பனைக் கட்டமைப்பு மற்றும் பொது உற்பத்திக் கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக ஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ.2.5 கோடிக்கு மிகாத வகையில் 70 சதவீத மானிய உதவி வழங்கும் புதிய திட்டத்தை இந்த அரசு தொடங்கும். முதல் கட்டமாக, இத்தகைய 10 குறுந்தொழில் குழுமங்களை அமைத்திட 2014–2015–ம் ஆண்டிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொலைநோக்குப் பார்வை 2023 இலக்கை எய்திட திறன் மேப்பாட்டு இயக்கத்திற்கு 2014–2015–ம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் ரூ.50.89 கோடி செலவில் 10 புதிய அரசு தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்கள் இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைப் பெறும் வகையில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியைப் பயன்படுத்தி ரூ.50 கோடி செலவில் மாநிலத்தில் உள்ள அரசுத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களும் நவீனமயமாக்கப்படும்.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளை ஊக்குவிப்பதற்கு இளம் தொழில்முனை வோர்களுக்கு உதவும் ஒரு பெரும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களிலும் 10 சதவீத இடம் தனியாக ஒதுக்கப்பட்டு அதில் தகவல் தொழில்நுட்பத் தொழிலை புதிதாகத் தொடங்குவதற்கான மையங்கள் ஏற்பட்டுத்தப்பட்டு, புதிய தொழில் முனை வோருக்கு 2014–2015–ம் ஆண்டு முதல் இவை வழங்கப்படும்.இலவச வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்திற்கு 2014–2015–ம் ஆண்டு ரூ.499.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்வசதி கொண்ட, 10000 பசுமை வீடுகளை அமைக்க ரூ.260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ.2.60 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2014–2105–ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக ரூ.5168.07 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வரும் ஆண்டில் 60 ஆயிரம் வீடுகளை அமைத்திட ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர இந்திரா வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் விடுகள் அமைக்கப்படும். இதற்கான கூடுதல் செலவுக்காக ரூ.729.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டு திட்டத்திற்காக 2014–2105–ம் ஆண்டு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 2014–2015–ம் ஆண்டில் ரூ.757.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ.716.77 கோடி ஒதுக்கீடு.

தஞ்சாவூர் மற்றும் திருநல்வேலியில் ரூ.300 கோடி செலவில் இரண்டு பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

தரமான இலவசக் கல்வியை அளிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17731.71 கோடி ஒதுக்கீடு.

பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.700 கோடி ஒதுக்கீடு. தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு, மாநில அரசின் பங்காக ரூ.384.90 கோடி ஒதுக்கீடு.மாணவ–மாணவிகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்