முக்கிய செய்திகள்:
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி - மிசோரமில் தொடங்கியதுவாக்கு எண்ணிக்கை

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது. சத்தீஷ்கரிலும் பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்காக 4 மாநிலங்களுக்கும் மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. மிஸோரம் மாநிலத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. மற்ற 4 மாநிலங்களிலும் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 31 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திரு. அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான "ஆம் ஆத்மி" கட்சி 28 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்து, 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 8 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதல் ஒரு இடத்திலும், மற்ற வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் திருமதி ஷீலா தீட்சித் தோல்வியடைந்தார். இவரை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தோல்வியை அடுத்து, திருமதி ஷீலா தீட்சித், தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவைப்படுவதால் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் ஆட்சி அமைக்க கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ஆம்ஆத்மி கட்சி, பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 199 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி 162 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதர கட்சிகள் 15 இடங்களை பெற்றுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இங்கு பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் ​வேட்பாளர் வசுந்தரா ராஜேசிந்தியா மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 165 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 58 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை சந்தித்துள்ளது. பகுஜன் சமாஜ்கட்சி 4 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தற்போது முதலமைச்சராக உள்ள ஷிவ்ராஜ்சிங் சவுகான் முதலமைச்சராக தொடர்கிறார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாரதிய ஜனதா 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன்சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், மற்றவை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. தற்போது முதலமைச்சராக உள்ள ரமன்சிங் ஆட்சியை தொடர்கிறார்.

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இன்மையை அப்பட்டமாக புலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நினைத்தபோதெல்லாம் உயர்த்திவருவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடைபெற்ற இமாலய ஊழல் போன்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகளாலும், நிர்வாக சீர்கேடுகளாலும் கடும் அதிருப்தி அடைந்துள்ள மக்கள், காங்கிரசுக்கு எதிரான தங்களின் கடுமையான கோபத்தை இந்த 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்