முக்கிய செய்திகள்:
இந்து முன்னணி தலைவர் கொலையில் 6 தீவிரவாதிகள் கைது

இந்து முன்னணி தெரு முனை கூட்டங்களில் இந்து மதத்தை பற்றி பல்வேறு தகவல்களை திரட்டி புள்ளி விவரங்களுடன் பேசி வந்த சுரேஷ்குமார் சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்தும் ஆவேசமாக பேசியிருக்கிறார். இதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அப்போது தீவிரவாத இயக்கத்தினர் சிலர் தான் திட்டம் போட்டு சுரேஷ் குமாரை படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் பெரிய அளவில் உதவிகள் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அம்பத்தூர் பாடியை சேர்ந்த நசீர், கடலூர் பரங்கிப்பேட்டையை சேர்ந்த குத்புதீன் மற்றும் காஜாமொய்தீன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினர். இவர்களுடன் 17 வயது மாணவர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் அனைவரும் சுரேஷ் குமாரின் நடமாட்டம் பற்றி கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்தவர்கள். இருப்பினும் சுரேஷ்குமாரை வெட்டிக் கொன்றவர்கள் யார்? என்பதில் மர்மம் நீடித்தது.

இந்நிலையில் இக்கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் 4 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் மயில் வாகனன் ஆகியோர் தீவிரவாதிகளை எப்படி பிடிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் 2 நாட்களுக்கு முன்னர் பெங்களூருக்கு விரைந்தனர். அங்கு விவேக் நகர் மற்றும் சிவாஜி நகர் பகுதியில் முகாமிட்ட அவர்கள் மாறு வேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த ரகசிய ஆபரேஷனுக்கு நல்ல பலன் கிடைத்தது. சுரேஷ்குமாரை வெட்டிக் கொன்றதாக கூறப்படும் முகம்மது சமீம், செய்யது அலிநவாஸ், அப்துல்ஹக்கீம், மற்றும் கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அபுதாகிர், அடைக்கலம் கொடுத்த சமியுல்லா, சாதிக் ஆகிய 6 பேரும் பெங்களூரில் இருப்பது உறுதியானது. நேற்று மாலை 4.30 மணியளவில் பெங்களூர் ராஜேந்திரா நகர் பகுதியில் முதலில் சமியுல்லாவை அவர் தங்கி இருந்த வீட்டில் கைது செய்தனர். அதன் பிறகு அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற 5 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக 6 பேரும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணி அளவில் சென்னையை வந்தடைந்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். இக்கொலையின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? சுரேஷ்குமாரை கொலை செய்ய சென்னையில் வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றி 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அளிக்கும் தகவல்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ள போலீசார் அனைவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கிறார்கள். சுரேஷ்குமாரை போல மேலும் பல இந்து இயக்க தலைவர்களுக்கு இவர்கள் குறி வைத்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

சென்னையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் 11 பேரை தீர்த்துக் கட்டப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்துக்கும், கைதான தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடக்கிறது. இதன் முடிவில் தீவிரவாதிகள் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரேஷ்குமார் கொலையில் சிக்கியிருக்கும் 6 பேரில், சமீம், நவாஸ் இருவரும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் பா.ஜனதா கட்சி பிரமுகரான எம்.ஆர்.காந்தியை வெட்டிக் கொலை செய்ய முயன்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ்குமார் கொலையில் கைதான தீவிரவாதிகள் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–

இஸ்லாத்தை பற்றி அவதூறாக பேசி வரும் இந்து இயக்க தலைவர்களை தீர்த்து கட்ட புது இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறோம். அம்பத்தூர் சுரேஷ்குமார் இந்து முன்னணி தெருமுனை கூட்டங்களில் ஆவேசமாக பேசி வந்தார். பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் நடந்த கூட்டங்களில் இஸ்லாத்தை இழிவுபடுத்தி அவர் பேசினார். எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 5 மாதங்களாக அவரது நடமாட்டத்தை கண்காணித்தோம். கொலையை எப்படி செய்வது? அங்கிருந்து எப்படி தப்பி செல்வது? என்று பலமுறை ஒத்திகை பார்த்தோம். முடிவில் சுரேஷ்குமார் தனது கடையை மூடிவிட்டு செல்லும் நேரம் தான் கொலை செய்ய சரியான நேரம் என்று முடிவு செய்தோம். இதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே அம்பத்தூர் பகுதிக்கு வந்து கண்காணித்தோம்.

பின்னர் ஜூன் 15–ந்தேதி அதாவது சுரேஷ்குமார் கொலை செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு அம்பத்தூரில் தங்கினோம். நாங்கள் எதிர்பார்த்தபடி சுரேஷ்குமார் கடையை மூடிய நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றோம்.

இவ்வாறு அந்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

சமியுல்லாவின் சொந்த ஊர் சேலம், பெயின்டர் வேலை செய்து வரும் அவர் நீண்ட நாட்களாக பெங்களூரில் குடியிருந்து வருகிறார். இந்துவாக இருந்த அவர் 1994–ம் ஆண்டில் தான் மதம் மாறி இருக்கிறார். அவரது இயற்பெயர் கண்ணன். இவர்தான் கொலையாளிகள் 3 பேருக்கும் பெங்களூரில் அடைக்கலம் கொடுத்துள்ளார். சாதிக் வேலூர் வாணியம்பாடியை சேர்ந்தவர். பெங்களூரில் டெய்லராக இருக்கும் இவரும் நீண்ட நாட்களாக பெங்களூரில் குடியிருக்கிறார். இவரும் சமியுல்லாவை போல் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். 3 பேரும் அவ்வப்போது அங்கு சென்று தங்கி உள்ளனர். மேலும் சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படும் அபுதாகிர் பாடியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி இருக்கும் காஜா மொய்தீனுடன் சேர்ந்து கொலைக்கான சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வழக்கில் கொலையாளிகள் 3 பேருக்கும் சங்கிலி தொடர் போல பல இடங்களில் பல்வேறு நபர்கள் உதவி செய்துள்ளனர். தற்போது பிடிபட்டவர்கள் போக மேலும் பலர் தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுரேஷ்குமார் கொலையில் ஆரம்பத்தில் எந்த ஒரு துப்பும் துலங்காமல் இருந்த நிலையில் சென்னை மாநகர உளவு பிரிவு போலீசாரும், தனிப்படை போலீசாரும் இணைந்து நடத்திய ரகசிய விசாரணையில் பெங்களூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்