முக்கிய செய்திகள்:
கைவினை கலைஞர்கள் 10 பேருக்கு ஜெயலலிதா விருது வழங்கினார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10 பேருக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது வழங்கினார்.

பூம்புகார் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் தமிழக கைவினைஞர்களை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் 2013-14-ம் ஆண்டு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது” என்ற விருதை 65 வயதுக்கு மேற்பட்ட கைவினைஞர்களுக்காக அறிவித்தார். இந்த விருதுக்கு தமிழ்நாட்டில் கைவினை தொழிலில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட 65 வயதுக்கும் மேற்பட்ட 10 கைவினைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா விருதுகளை வழங்கினார். அதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த பஞ்சலோகச் சிற்பக் கைவினைஞர் சு.சாம்பசிவ ஸ்தபதி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஞ்சலோகச் சிற்பக் கைவினைஞர் சீ.சாரங்கன், ஈரோட்டைச் சேர்ந்த பஞ்சலோகச் சிற்பக் கைவினைஞர் எல்.ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலைச் சேர்ந்த பித்தளை விளக்கு கைவினைஞர் சு.மணி, தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சாவூர் கலைத்தட்டு கைவினைஞர் வ.நடராஜன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மரத்தேர் கைவினைஞர் க.பரமசிவன் ஸ்தபதி, திருவண்ணாமலை மாவட்டம் மொடையூரைச் சேர்ந்த கற்சிற்பக் கைவினைஞர் சிற்பி அ.நடராஜ ஆச்சாரி.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கோவில் கட்டிடக்கலைக் கைவினைஞர் ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரி, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த பத்தமடை பாய் நெசவுக் கைவினைஞர் க.ரஹமத்துல்லா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த கோவில் நகைகள் கைவினைஞர் சா.ராமச்சந்திரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்