முக்கிய செய்திகள்:
டீசல் விலை உயர்வை திரும்ப பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பணவீக்கம், அதிலும் குறிப்பாக உணவு பணவீக்கம் இன்னமும் எதிர்பார்த்த அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையில், உணவு பணவீக்கம் உயர்வதற்கு காரணமான டீசல் விலையை நேற்று நள்ளிரவு முதல் எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி இருப்பது கவலை அளிக்கிறது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையே எண்ணெய் நிறுவனங்கள் இது போன்று விலை உயர்வை அறிவித்திருப்பதற்கு காரணம் ஆகும். சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்து கொண்டே வருகின்ற நிலையில், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் டீசல் விலை நிர்ணயக் கொள்கையை சுட்டிக் காட்டி, அதன்படி டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் என்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பது ஏழை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது.

டீசல் விலை உயர்வு காரணமாக, உணவுப் பொருட்களை ஆங்காங்கே எடுத்துச் செல்லும் வேன், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும். இந்த உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையையும் உயர்த்த வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், பிற வாகனங்களின் கட்டணங்களும் உயரக்கூடும். இதன் மூலம் தனியார் வாகனங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுவர். சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

டீசல் விலை உயர்வு என்பது சங்கிலித் தொடர் போன்றது. அனைத்து பொருட்களின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்குவது டீசல் விலை உயர்வு. இந்த உயர்வைக் கட்டுப்படுத்தினால், உணவு பணவீக்கம் உள்பட அனைத்து பணவீக்கமும் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தற்போது எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை என்பது முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான கொள்கையை அடிப்படையாக கொண்டது. பல துறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் பாரத பிரதமர், நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளபடி, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் தனி கவனம் செலுத்தி, பணவீக்கம் மற்றும் விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும், தற்போதைய டீசல் விலை உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்