முக்கிய செய்திகள்:
கோவை மேயர் தேர்தலில் பா.ஜனதா போட்டியிட முடிவு

கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர் உள்ளிட் 8 நகரசபை தலைவர்கள் பதவி மற்றும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு நேற்ற முன்தினம் தொடங்கியது. வருகிற 4–ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது.

இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். தி.மு.க. போட்டியிடாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். மற்ற கட்சிகள் எந்த வித அறிவிப்பும் வெளியிட வில்லை. இந்த நிலையில் குறிப்பிட்ட சில இடங்களில் போட்டியிட தமிழக பா.ஜனதா தயாராகி வருகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜனதாவுக்கு 3 லட்சத்து 89 ஆயிரத்து 701 ஓட்டுக்கள் வாங்கி 2–வது இடத்தை பிடித்தது. கோவை தெற்கு, சிங்கா நல்லூர் சட்டசபை தொகுதிகளில் மற்றகட்சிகளைவிட அதிக ஓட்டு வாங்கியது. இது போல் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா 51 ஆயிரத்து 479 ஓட்டுக்களையும் பெற்றது. குன்னூரிலும் பெருமளவு வாக்குகள் பா.ஜனதாவுக்கு உள்ளது.

எனவே கோவை மேயர் பதவி, ராமநாதபுரம், குன்னூர் நகரசபை தலைவர் பதவிக்கான இடைத் தேர்தலில் பா.ஜனதா போட்டியிட வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசித்து வருகிறார். ஒருசில தினங்களில் பா.ஜனதா மாநில தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கோவை, ராமநாதபுரம், குன்னூரில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்