முக்கிய செய்திகள்:
டி.டி. மருத்துவ கல்லூரி மாணவிகள் மயங்கி விழுந்தனர்

திருவள்ளூர் டி.டி. மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் அங்கு படித்து வந்த மாணவ – மாணவிகள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும், அல்லது டி.டி. மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நேற்று மாணவ– மாணவிகள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு கொடுக்க தலைமைச் செயலகம் முன்பு கூடினார்கள்.போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 4 பேர் மட்டும் கோட்டைக்கு சென்று மனு கொடுக்க அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து 4 மாணவர்கள் கோட்டைக்கு சென்று முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.மனு கொடுத்த பின்பும் அவர்கள் கலைந்து செல்லாமல் கோட்டை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

இவர்களை போலீசார் கைது செய்து கொண்டிதோப்பு போலீஸ் குடியிருப்பில் உள்ள சமுதாயச் கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிததனர்.ஆனால் மாணவ – மாணவிகள் விடுதலையாக மறுத்தனர். கைதான 90 மாணவ–மாணவிகள் சமுதாயக் கூடத்திலேயே உண்ணாவிரதம் இருந்தனர். இன்றும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

இதன் காரணமாக மாணவிகள் சோர்வடைந்தனர். இன்று காலை மாணவிகள் ரோஷ்மி, சகானா, மோனிகா ஸ்ரீ, சங்கீதா, கனிமொழி, சங்கவி ஆகிய 6 மாணவிகள் மயங்கி விழுந்தனர். அவர் கள் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.சமுதாய கூடத்தின் வெளியே ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

மேலும் செய்திகள்