முக்கிய செய்திகள்:
தமிழ்நாட்டில் பா.ஜனதா புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்

தமிழக பாரதீய ஜனதாவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 16–ந்தேதி அறிவிக்கப்பட்டார். பா.ஜனதாவின் விதிகளின்படி, மாநில தலைவர் மாற்றப்பட்டால் கட்சியின் மாநில நிர்வாகிகளின் பதவி காலமும் முடிந்து விடும். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரைதான் அவர்கள் பொறுப்பு வகிக்க முடியும்.

எனவே மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், பொருளாளர் ஆகியோரை புதிதாக நியமிக்க வேண்டும். புதிய மாநில தலைவர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை செய்து இவர்களை நியமிப்பார்.கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனின் நியமனத்துக்கு தமிழக பா.ஜனதாவின் பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் வழங்க வேண்டும். புதிய மேலிட பொறுப்பாளர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டதும் செயற்குழு, பொதுக்குழு கூடும்.

தற்போதைய மேலிட பொறுப்பாளர்களான முரளிதரராவ் தேசிய பொதுச்செயலாளராகவும், வி.சதீஷ் இணை அமைப்பு பொதுச்செயலாளராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களே மீண்டும் தமிழக பா.ஜனதாவின் மேலிட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்களா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும். அதன் பிறகு செயற்குழு பொதுக்குழு கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜனதா தலைவராக முறைப்படி பதவி ஏற்கிறார். அதன் பிறகு மாநில புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து பா.ஜனதா மூத்த, உயர்மட்ட தலைவர்களுடனும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடனும் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாராகி விடும் என்று தெரிகிறது.இதில் தற்போது பதவியில் இருக்கும் சிலர் மாற்றப்பட்டு புதியவர்கள் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மாநில தலைவர் பொறுப்பை தமிழிசை சவுந்தரராஜன் முறைப்படி ஏற்ற பிறகு கட்சியின் மேலிட ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுகிறார்கள்.

2016–ல் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக பா.ஜனதாவை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழக பா.ஜனதாவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கை வருகிற நவம்பர் மாதம் முதல் நடைபெறுகிறது. இதற்காக தமிழிசை சவுந்தரராஜன் மாநில முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார். வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை கட்சி தலைவர் அமித்ஷா வழங்குவார் என்று மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகள்