முக்கிய செய்திகள்:
தமிழகம் முழுவதும் 75 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நடந்த தென் சென்னை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பொதுக் குழுவில் ராமதாஸ் பேசியதாவது:–

பா.ம.க. தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நம்மால் ஏன் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை கட்சி நிர்வாகிகள் சிந்திக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் நமது ஆட்சி அமைய வேண்டும். அதற்காக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

இது வரை ஆண்ட கட்சிகள் எதுவும் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இந்த நல்ல தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் 75 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பவருக்கு 1 சவரன் தங்க மோதிரத்தை நான் பரிசாக வழங்குவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜமுனா கேசவன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராம.கன்னியப்பன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர்கள் இரா.சகாதேவன், பழனிச்சாமி, ஆறுமுகம், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் பேசினார்கள். மாநில துணைத்தலைவர் ஈகை தயாளன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மாம்பலம் வினோத் நாடார், அமைப்பு செயலாளர் ஜெயராமன், அடையாறு வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்