முக்கிய செய்திகள்:
தமிழிசை சவுந்தரராஜனுக்கு ராமதாஸ்–விஜயகாந்த் வாழ்த்து

தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனுப்பி உள்ள வாழ்த்துக் செய்தியில் கூறியிருப்பதாவது:–

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். எனது நண்பர் குமரி அனந்தனின் புதல்வி. பெயருக்கேற்ற வகையில் தமிழ் மொழி மீதும், இனம் மீதும் பற்று கொண்டவர். தமிழகம் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்து தெளிவான புரிதல் கொண்டவர். பாரதீய ஜனதாவின் மாநில துணைத் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாக செயல்பட்டவர். அதற்கான பரிசாக கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அவரது புதிய பொறுப்பை திறம்பட நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளராக எச். ராஜா நியமிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளிலும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல் பட்ட அவர் புதிய பொறுப்பிலும் சாதிக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழக பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவர் மகப்பேறு மருத்துவர், தமிழ் இலக்கியவாதி, சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர் என்பதோடு அரசியலில் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் புதல்வியுமான இவர் தமிழக பாஜக வின் தலைவராக திறம்பட செயலாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதோடு பாஜகவின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அரசியலில் நீண்ட அனுபவமும், பழகுவதற்கு எளிமையானவருமான எச்.ராஜாவுக்கும் தேமுதிக சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். தமிழகத்தைச் சேர்ந்த எச்.ராஜா வை தேசிய செயலாளராகவும், டாக்டர். தமிழிசை சௌந்திரராஜனை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகவும் நியமனம் செய்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இவர்கள் இருவரும் தங்கள் பதவி காலத்தில், தமிழக பாரதீய ஜனதா கட்சியை மென்மேலும் வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விரு தலைவர்களுக்கும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகள்