முக்கிய செய்திகள்:
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு முதல் இடம் தரவேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின் படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர். இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டு மின்றி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடை முறையும் உள்ளது. இதன் மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன.

ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் வெறும் 772 பேருக்கு மட்டுமே இப்போது வேலை வழங்கப்படுகிறது.

தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை அதிக அளவில் நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போதிலும், ஆசிரியர் நியமனத்தில் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கையால் தான் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறைகிறது.

ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழை முதலிடத்திற்கு கொண்டு வந்தால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தமிழாசிரியர் கட்டாயமாக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும். இதன்மூலம் தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்