முக்கிய செய்திகள்:
வனத்துறையில் காலியாக உள்ள 650 பணியிடங்கள் நிரப்பப்படும்: ஜெயலலிதா

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

மரம் வளர வனம் பெருகும், வனம் பெருக மழை பொழியும், மழை பொழிய பயிர் வளரும், பயிர் வளர மக்கள் உயர்வர், மக்கள் உயர மாநிலம் உயரும் என்பதற்கேற்ப வனங்களைப் பாதுகாத்து, அதன் மூலம் மக்களையும், விலங்குகளையும், பறவைகளையும் காப்பதற்கான பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செவ்வனே செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் கீழ்க்காணும் திட்டங்களை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை உறுதி செய்யவும், தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக்கவும், நடப்பு ஆண்டில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு, அடிப்படை இயற்கை வளங்களை பெருக்க தனியார் நிலங்களில் மரங்கள் வளர்த்தல் மற்றும் ஆளுமைத் திறன் மேம்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய திட்டப்பணிகள் 110 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

வளமான சூழல் அமைப்பினை உறுதி செய்யும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு, வனப் பணியாளர்கள் திறம்பட வனங்களைப் பாதுகாத்து மேம்படுத்திட உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பினை அதிகரித்தல், காடு வளர்ப்பு போன்ற பணிகள் 35 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு ஆண்டு மேற்கொள்ளப்படும்.

வனத்துறை களப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு முதல் அவர்களுக்கு மாதந்தோறும் 400 ரூபாய் இடர் படியினை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

இயற்கை வளத்தின் சின்னமாக விளங்கும் வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் பணியில் முறையான பீட் பணியாளர்களுக்கு உறுதுணையாக மிகைப் பணியிடத் தோட்டக் காவலர்களும், மிகைப் பணியிட வேட்டைத் தடுப்புக் காவலர்களும் பணிபுரிந்து வருவதால், வனத் துறையின் களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடர் படியின் பயன் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 76 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும். இதன் மூலம் மிகைப் பணியிடத்தில் பணிபுரிந்து வரும் 1,439 தோட்டக் காவலர்களும், 137 வேட்டைத் தடுப்புக் காவலர்களும் பயனடைவார்கள்.

உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் தமிழ்நாடு தற்போது முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 14 வன உயிரின சரணாலயங்களும், 5 தேசிய பூங்காக்களும், 14 பறவைகள் சரணாலயங்களும், 4 புலிகள் காப்பகங்களும், 4 யானைகள் காப்பகங்களும், 3 உயிர்க்கோள் காப்பகங்களும், ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன. சுற்றுச்சூழலுடன் இணைந்த உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் வன உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்க உகந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

எனவே, உயிரியல் முக்கியத்துவம் நிறைந்த பகுதிகளை வன உயிரின சரணாலயமாக ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 15 ஆவது வன உயிரினச் சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயம் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இடம் பெயர்ந்து வரும் பல்வேறு பறவையினங்களின் குளிர்கால புகலிடமாக மட்டுமின்றி, உயிர்ப் பன்மை செறிந்ததாகவும் விளங்கும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒசூடு ஏரிப் பகுதி தமிழ்நாட்டின் 15 ஆவது பறவைகள் சரணாலயமாக ஆக்கப்படும்.

வனத்துறையின் களப் பணியாளர்களுக்கு வன உயிரினங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, மனிதவன உயிரின மோதல்களைத் தடுத்தல், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் திறம்பட பயிற்சி அளிக்கும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அட்டகட்டி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு பகுதிகளிலுள்ள அடிப்படைப் பயிற்சி மையங்கள் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வன உயிரின மேலாண்மைப் பயிற்சி மையங்களாக தரம் உயர்த்தப்படும். இப்பயிற்சி மையங்களை நிர்வகிக்க இரண்டு உதவி வனப் பாதுகாவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

வனத் துறை மற்றும் அதைச் சார்ந்த மூன்று வனக் கழகங்களில் வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் மற்றும் வனக் காவலர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள சுமார் 650 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நடப்பாண்டில் நிரப்பப்படும்.

முதன் முறையாக வனத் துறையில் இப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் மகளிரும் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதை இந்த மாமன்றத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் திட்டங்கள் விலங்குகள் பாதுகாப்பிற்கும்; வருங்கால சந்ததியினரின் வளமான வாழ்விற்கும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்