முக்கிய செய்திகள்:
நட்வர்சிங்கின் கருத்தை ஏற்க முடியாது: ஞானதேசிகன்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நட்வர்சிங் எழுதி உள்ள புத்தகத்தில் சோனியாகாந்தி பிரதமர் பதவி ஏற்க மறுத்த காரணம், ராகுல்காந்தி தன் பாட்டியை போல், தந்தையைப் போல் ஆகி விடக் கூடாது என்ற அச்சத்திலும், அவரின் வற்புறுத்தலின்பேரில் பதவி ஏற்கவில்லை என்று எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியபோது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்றும், 15 ஆண்டுகள் குடும்ப நண்பராக இருந்த தன்னை மிக மோசமாக சோனியாகாந்தி நடத்தினார் என்றும், வேறு இந்தியராக இருந்தால் இது நடந்திருக்காது என்றும் நட்வர்சிங் அந்த புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது.முன்பெல்லாம் புத்தகங்கள் எழுதுபவர்கள் சுயசரிதை எழுதுபவர்கள் சரித்திர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளை பதவி செய்பவர்கள் உள்ளது உள்ளபடி எழுதி, அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது வழக்கம்.

இன்றைக்கு அந்த நிலை மாறி, தன் சொந்த லாபங்களுக்காக பல்வேறு கருத்துக்கைளை பதிவு செய்வதும், அதற்காக எந்த ஆதார குறிப்பும் இல்லாமல் தன் புத்தகங்கள் விற்க வேண்டும், மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற அரசியலில் பணியாற்றியவர்கள், அரசியல்வாதிகள் புத்தகங்கள் எழுதுவது நடைமுறை வழக்கமாகி வருகிறது.ராகுல்காந்தி, சோனியா காந்தியை பிரதமர் பதவி ஏற்க கூடாது என்று சொன்னதற்கு நட்வர்சிங்கிடம் உள்ள ஆதாரம் என்ன? நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்று நீதிமன்ற கூண்டுக்குள் நின்று சத்தியம் செய்கிற சாட்சிகள் கூறுகிற வாக்குமூலங்கள் கூட பொய்யாகிறபோது, புறக்கணிக்கப்பட்ட ஒரு அரசயல்வாதியின் கருத்து எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும்?

சோனியாகாந்தி மனம் நொந்து சொல்லியிருப்பதைப் போல தன்னுடைய மாமியார் சல்லடையாக குண்டுகள் துளைத்ததை கண்ணதிரே பார்த்தவர், தனது அன்பு கணவர் மனித வெடிகுண்டால் ஸ்ரீபெரும்புதூரில் சுக்கு நூறாக ஆக்கப்பட்ட துயரத்தையும் தன் மனதில் தாங்கிக் கொண்டிருப்பவர்.இதுபோல் அவரை காயப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் அவரை ஏதும் செய்யாது என்றாலும் கூட இந்நாட்டு மகளாக காங்கிரஸ் பேரியகத்தின் தலைமை பொறுப்பை ஏற்று, இந்த தேசத்தின் நலனுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தாயை மேலும் மேலும் இப்படி காயப்படுத்துகிற நிகழ்வுகள் காங்கிரசால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நட்வர்சிங்கின் மகன் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பதை பலர் அறியவில்லை என்றாலும், நான் அறிவேன். அமித்ஷாவிடமும், மற்றவர்களிடமும் தன் மகனின் அரசியல் ஏற்றத்திற்கு இதுபோன்ற பொய்மைகள் உதவுமேயானால் உதவிவிட்டு போகட்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்