முக்கிய செய்திகள்:
ஜெயலலிதா- மோடியை பற்றி இலங்கை இணையதளத்தில் அவதூறு செய்தி

இலங்கை ராணுவ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் – அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவு படுத்தும் வகையில் அந்த தகவல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை தமிழக முதல்–அமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை? என்று மிகக் கீழ்த்தரமான ரசனையுடன் அந்தக் கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சரை இழிவு படுத்தும் வகையிலான இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின் இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. பல முறை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சிங்களப் படையினரின் இந்த செயலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். தமிழக முதல்– அமைச்சர் அவரது பங்கிற்கு இதுபற்றி பிரதமருக்கு இதுவரை 11 முறை கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆனால், இலங்கை அரசுத்துறை இணையத் தளத்தில், அதிலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணைய தளத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்து கண்ணியமற்ற மொழியில் கட்டுரை எழுதப்படுவது சரியா? இது இந்திய இறை யாண்மையில் குறுக்கிடும் செயல் ஆகாதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியை தங்களுக்கு நெருக்கமானராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் ராஜபக்சேவின் விருந்தினர்களாக சென்று, இந்திய அரசின் ஏகபோக பிரதி நிதிகளைப் போன்று தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருவது தான், இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்திருக்கிறது. இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது. இதற்காக தில்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக் கூடாது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாகச் சித்தரித்து, புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது.

இலங்கை ராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. இட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை ராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஜெயலலிதா அவர்களை இழிவு படுத்தத் துணிந்து இருக்கின்றது.

இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக முதல் அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதுவது வெறும் கடிதங்கள் அல்ல. இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி, இன்னமும் இராணுவ முற்றுகைக்குள் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திறந்தவெளிச் சிறையில் வாடிக் கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கவும் வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் தீட்டுகிறார். இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.

ஏழரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கடிதங்கள் அவை.

தமிழக முதலமைச்சரைக் கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?

ராஜபக்சே கைக்கூலியும் தமிழினத் துரோகியுமான சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசின் தூதராக இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்சேவுடன் கைகுலுக்கச் செய்து சிங்கள அரசுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று தெரிவித்ததுதான் இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறலுக்குக் காரணம்.

வரலாற்றில் தமிழ்நாட்டையோ, தமிழக முதல்– அமைச்சரையோ இந்த அளவுக்கு இழிவுபடுத்த உலகில் இதுவரை எவரும் துணிந்தது இல்லை. ஜெயலலிதா போடும் தாளத்திற்கு ஏற்ப பிரதமர் மோடி ஒருபோதும் ஆட மாட்டார். எனவே, ஜெயலலிதா எந்தவிதமான நியாயப்படுத்த முடியாத வெற்றுக் கூச்சல் எழுப்ப வேண்டாம் என்று திமிரோடு இலங்கை இராணுவ அமைச்சகம் கூறி இருக்கின்றது.

இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இன்று காலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையை கொச்சைப்படுத்தி தங்களின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில் கருத்து வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனே அந்த தகவல்களை அகற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் இது பற்றி ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமருக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தி தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதுபற்றி எனது கவனத்துக்கு வந்ததும் இலங்கை துணை தூதரை தொடர்பு கொண்டு அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு முதல்– அமைச்சர் தனது கடமையை செய்திருப்பதை கொச்சைப் படுத்தி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடும் ஆட்சேபத்துக்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எனது எதிர்ப்பை தெரிவித்தேன். அதுபற்றி துணைத் தூதர் என்னிடம் கூறும் போது, ‘வாசகர் யாரோ தனது கருத்தை பதிவு செய்து விட்டார். உடனடியாக அதை அகற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

இதுபோன்ற விமர்சனங்களை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எந்த இயக்கமும் ஏற்றுக் கொள்ளாது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்