முக்கிய செய்திகள்:
திமுகவுக்கு வாக்களித்த மக்களை அவமதித்துவிட்டார்கள்: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவை இந்த முறை ஜூலை 10-ந் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஜூலை 22-ந் தேதி வரை சட்டப்பேரவை நடைபெற்ற 9 நாட்களில் தி.மு.க. உறுப்பினர்கள் 9 முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு, தரப்படாத காரணத்தால்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிக்காரர்களை ஓடுகாலிகள் என்று ஒரு அமைச்சர் கேவலமாக கூறலாமா? பேரவை தலைவர் இத்தகைய பண்பாட்டுச் சிதைவை அனுமதிக்கலாமா?

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்திலே சுனாமி பேராபத்து ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே எனது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே இருந்தேன். சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும் மருத்துவமனைக்கே வந்து என்னை பார்த்தார்கள். ஆனால் அதற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து, சுனாமி ஆபத்து ஏற்பட்டபோது நான் வேண்டுமென்றே மருத்துவமனைக்கு சென்று படுத்துக்கொண்டேன், பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கவில்லை என்று பேரவையில் முதலமைச்சரும், வேறொரு அமைச்சரும் பேசுவதுதான் அரசியல் நாகரிகமா?

இதற்கு பதிலளிக்க, விளக்கமளிக்க தி.மு.க. உறுப்பினர்கள் முயன்றால் அதற்கு அனுமதியில்லை என்று கூறி அவை நடந்த இந்த ஒன்பது நாட்களில் மூன்று முறை வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அதன்பிறகுதான், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் என்னுடைய தலைமையில் 22-7-2014 அன்று மாலையிலே அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று, அதில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 31-7-2014 (இன்று) சென்னை மாநகரில் நானும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனும், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் உரையாற்றவிருக்கிறோம்.

ஆகஸ்டு 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் தமிழகத்தின் மற்ற நகரங்களில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும், ஏனைய சட்டப்பேரவை உறுப்பினர்களும், தி.மு.க. முன்னணி பேச்சாளர்களும் கலந்து கொண்டு தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பிலே பொது மக்களுக்கு விளக்கிடும் வகையில் கண்டன கூட்டங்களில் உரையாற்றவிருக்கிறார்கள்.

தி.மு.க. உறுப்பினர்களைச் செயல்படவிடாமல் அவமானப்படுத்தி விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். வெளியேற்றுவதன் மூலம், தி.மு.க.வுக்கு வாக்களித்த லட்சோபலட்சம் மக்களைத்தான் அவமதிக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்திலே நம்முடைய கருத்துகளை எடுத்துச்சொல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற போதிலும், மக்கள் மன்றத்திலே அங்கே ஜனநாயகத்திற்கு புறம்பாக என்ன நடைபெறுகிறது என்பதையும், நாட்டு மக்களின் நலன் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குவோம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்