முக்கிய செய்திகள்:
தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது தனக்கு மிகுந்த வேதனையை தருவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இன்று நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை ராணுவம் 50 மீனவர்களை கைது செய்ததுடன், 5 இயந்திரப் படகுகளையும், 2 நாட்டுப் படகையும் பறிமுதல் செய்துள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தினர் அவர்களை காங்கேசன் துறைக்கு அழைத்து சென்றுள்ளதாக தனது கடிதத்தில் கூறியுள்ள ஜெயலலிதா, கடந்த 22ந் தேதியும் பிரதமர் மோடிக்கு தான் எழுதிய கடிதத்தையும் நினைவு படுத்தியுள்ளார். அச்சமயத்தில் தனது கடிதத்தில் குறிப்பிட்ட 43 மீனவர்களும், அவர்களது 9 படகுகளும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தங்களது அரசாங்கம் எடுத்த துரித முயற்சியால் சீரான இடைவெளியில் 225 மீனவர்கள் படிப்படியாக இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 55 படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும், 62 படகுகளையும் விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்