Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் : ராமதாஸ் குற்றச்சாட்டு - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் : ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக சட்டப்பேரவையில் நடப்புக் கூட்டத்தொடரில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவர்களின் இதயங்கள் வேதனையில் கனக்கின்றன.ஒருகாலத்தில் மக்கள் நலன் சார்ந்த விவாதக்களமாக திகழ்ந்த சட்டமன்றம், இப்போது பல நேரங்களில் துதிபாடும் மன்றமாகவும், சில நேரங்களில் வசவுக்களமாகவும் மாறியிருப்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.

இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக்கு தனிப் பாரம்பரியம் உண்டு. இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் காயிதே மில்லத்தும், அண்ணா முதல்வராக இருந்தபோது கருத்திருமன், வினாயகம் போன்றவர்களும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காலத்தில் பேரவையில் நடந்த விவாதங்கள் வரலாற்றில் இடம் பிடித்தவை ஆகும். ஒருமுறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வினாயகம் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், ‘இன்னும் எத்தனை வினாக்கள் தான் கேட்பீர்கள்?’ என்று கேட்டனர். அப்போது புன்னகையுடன் குறுக்கிட்ட முதலமைச்சர் அண்ணா, அவர் கேட்கட்டும், இன்னும் கேட்கட்டும், அவர் பெயரிலேயே வினா இருப்பதால் அப்படித்தான் கேட்பார் என்று கூறினார். இதனால் அவையில் நிலவிய பதற்றம் தணிந்து சிரிப்பலை எழுந்தது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மதிப்பளித்து அவை நாகரீகத்தைக் காப்பாற்றினர் என்பதற்கு இத்தகைய சம்பவங்கள் உதாரணமாகும்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நிலை அதன் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. 4 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 10 ஆம் தேதி மீண்டும் தொடங்கிய தமிழக சட்டப் பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக எந்த விவாதமும் நடைபெற வில்லை. தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு,விலைவாசி உயர்வு, 61 பேர் உயிரிழந்த மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்து உள்ளிட்டமுக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்புத் தீர்மானங்கள் தரப்பட்டன. ஆனால், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு இங்கு இடமில்லை என்று கருதியதாலோ என்னவோ, இந்த பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சட்டப் பேரவைத் தலைவர் மறுத்து விட்டார். மற்ற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் பேரவையில் இதுவரை விவாதிக்கப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவை இந்த மாதத்தில் இதுவரை 12 நாட்கள் நடைபெற்றிருக்கிறது. அவற்றில் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 13 முறை அறிக்கை தாக்கல் செய்து பேசியிருக்கிறார்.

விவாதத்தின் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை குறுக்கிட்டு பேசியிருக்கிறார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொகுதிப்பிரச்சினை பற்றி பேசுவதற்குக் கூட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 முறை வெளிநடப்பு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, தி.மு.க. உறுப்பினர்கள் 4 முறை வெளியேற்றப்பட்டதைக் காரணம் காட்டி அவர்களை நடப்புக் கூட்டத் தொடர் முழுவதும் அவையிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் எத்தனை வினாக்களை எழுப்பினாலும் அதை அனுமதிக்க வேண்டும் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா கூறியதையும், அவரது வழியில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் இன்றைய முதல்வர், எதிர்க்கட்சிகளே அவையில் இருக்கக்கூடாது என்று கருதி அவர்களை அவையிலிருந்து விரட்டியடிப்பதையும் பார்க்கும்போது,கடந்த 45 ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவையில் அவை நாகரீகம் படிப்படியாக எந்தளவுக்கு அழிந்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

அவை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும், தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தைப் போல மாறிவிட்டதாக குற்றஞ்சாற்றுகின்றனர். அவை நடவடிக்கைகளில் முழுமையாக கலந்து கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்வது தான் நல்ல முதலமைச்சருக்கான இலக்கணம் என்று கூறப்படுகிறது.இதுவரை இருந்த முதலமைச்சர்கள் இந்த இலக்கணத்தை தான் கடைபிடித்து வந்துள்ளனர். ஆனால், இப்போதைய முதலமைச்சரோ,கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் அவைக்கு வருவதையும், தமக்கென தயாரிக்கப்பட்டுள்ள 110 விதியின்படியான அறிக்கைகளை வாசிப்பதையும், அதன்பின் அவையிலிருந்து வெளியேறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட முதலமைச்சரால் மக்களின் குறைகளை எப்படி அறிந்து, சரி செய்ய முடியும் என்பது தெரியவில்லை.

சட்டப்பேரவையைப் பொறுத்தவரை பேரவைத்தலைவர் தான் முதன்மையானவர் ஆவார். அவருக்கு மரியாதை தரப்பட வேண்டியதும், அவரது உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியதும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் கடமை. ஆனால், பேரவைத்தலைவர் வரும் போது அவையில் இருந்தால் எழுந்து நிற்க வேண்டும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக முதலமைச்சர் மிகவும் தாமதமாக வருவதும், அவர் வரும்போது பேரவைத் தலைவரே பணிவுடன் எழுந்து வணங்குவதும் அவைக்கு மரியாதை செய்வதாக இருக்காது.

இதற்கெல்லாம் மேலாக, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டு வரும் முதல்வரை நீதி தேவதை என்றெல்லாம் பேரவைத்தலைவரே புகழ்வது அவையின் மாண்புக்கு உகந்ததா? என்பதை அவை விதிகளை அறிந்த சான்றோர் தான் விளக்க வேண்டும்.சட்டப்பேரவை என்பது மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கான அரங்கமாகும். ஆனால், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசவேக் கூடாது; முதல்வரின் புகழைப் பாடுவதை தவிர வேறு எதற்காகவும் மூச்சு விடக்கூடாது என்ற அளவுக்கு சட்டமன்றத்தில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. இதன்மூலம் வாக்களித்த மக்களுக்கு ஆளுங்கட்சி பெரும் துரோகம் இழைத்து வருகிறது. சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க.விலிருந்து அதிக உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்பியதால் சட்டப்பேரவையை தங்களுக்கு நிரந்தரமாகவே எழுதிக் கொடுத்துவிட்டதாக நினைத்து ஆளுங்கட்சியினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஏற்றிவிட்ட மக்களால் இறக்கிவிடவும் முடியும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

சட்டமன்றத்தில் ஜனநாயகம் மடிந்து சர்வாதிகாரம் தழைத்தோங்கிவிட்ட நிலையில், மக்களின் பிரச்சினைகளை இனியும் அங்கு பேசி தீர்வு காண முடியும் என்பது நினைப்பது அறியாமையாகவே இருக்கும்.எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் மன்றத்தையே சட்டமன்றமாக மாற்றியமைத்து ஆளுங்கட்சியினரின் அதிகார அத்துமீறல்கள் குறித்தும், மக்களுக்கு சேவையாற்ற அனுமதி மறுப்பது குறித்தும் விளக்க வேண்டும். இப்பணியை மக்கள் மன்றத்தில் பா.ம.க. தொடர்ந்து மேற்கொள்ளும். அதேபோல், அ.தி.மு.க. அரசை அகற்ற நினைக்கும் அனைவரும் இப்பணியை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்