முக்கிய செய்திகள்:
அங்கன்வாடி மையங்களின் தரம் உயர்த்தபடுகிறது : ஜெயலலிதா

சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

கர்ப்பிணித் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிறைவான ஊட்டச்சத்து, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலை, சிசு இறப்பு விகிதம் குறைப்பு போன்ற குறிக்கோள்களை அடையும் வண்ணம், தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35 லட்சத்து 36 ஆயிரத்து 705 பேர் பயன் அடைந்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் மேலும் பல சலுகைகளையும், வசதிகளையும் தாய்மார்களும், குழந்தைகளும், ஏழை, எளிய குடும்பங்களும் பெறும் வண்ணம் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனடைந்து வரும் 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகள் குதூகலமான சூழலில் வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களை “எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக”, தரம் உயர்த்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதற்கட்டமாக, மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில், 5,565 அங்கன்வாடி மையங்கள் 55 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம், 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். இவ்வாறு தரம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மையங்களில் 100 சதுர அடி அளவில் கூடுதலாக ஓர் அறை கட்டுதல், குழந்தை நேய கழிப்பறைகளைக் கட்டுதல் மற்றும் சீரமைத்தல், தண்ணீர்த் தொட்டி அமைத்தல், கை கழுவும் தொட்டி, சமையலறைத் தொட்டி, காலணி அலமாரி, தண்ணீர் வடிகட்டி ஆகியவற்றை அமைத்தல், குழந்தைகளுக்கான வெளி விளையாட்டு சாதனங்கள், நாற்காலி மற்றும் மேசை, வாத்து மற்றும் குதிரை வடிவிலான ஆடும் நாற்காலி, புத்தகப் பை மற்றும் தண்ணீர் பாட்டில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை வழங்குதல், அங்கன்வாடி மையங்களில் வெள்ளை அடித்து சுவர் ஓவியம் வரைதல் மற்றும் சிறிய பழுதுகளை நீக்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடிப் பயனாளிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து, சுகாதார சேவைகள், தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சலின் அளவினை மின்னணு வெப்பமானி, மூலம் அறிந்து, பதிவு செய்து, அதற்கேற்றாற் போல் மருந்துகளை வழங்கினால் நலம் பயக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, மின்னணு வெப்பமானி, காயத்திற்கு கட்டும் துணியை வெட்டும் கத்திரிக்கோல், சுத்தப்படுத்தப்பட்ட காயத்திற்கு கட்டும் துணி, நுண் துளையிடப்பட்ட ஒட்டும் துணி, காயங்களுக்கான ஒட்டுப்பசைத் துணி, மற்றும் முதலுதவி கையேடு ஆகியன அடங்கிய முதலுதவிப் பெட்டிகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

3. பணிக்குச் செல்லும் தாய்மார்கள், 5 வயது வரையுள்ள தங்கள் குழந்தை களைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர் கொள்வதால், அக்குழந்தைகளுக்கு பராமரிப்பகங்களை அமைப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள அங்கன்வாடி மையங்களை “மழலையர் பராமரிப்பகங்களாக” தரம் உயர்த்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதற்கட்டமாக பெரம்பலூர், கன்னியாகுமரி, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் மொத்தம் 211 அங்கன்வாடி மையங்கள் 2 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்தப்படும். இந்த “மழலையர் பராமரிப்பகங்கள்” முதற்கட்டமாக தேவைப்படும் இடங்களில் வாடகைக் கட்டடங்களில் முதன்மை அங்கன்வாடி மையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதன் மூலம், 211 அங்கன்வாடி மையங்களில் ஒரு மையத்திற்கு குறைந்தபட்சமாக 15 குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் மொத்தம் 3,165 குழந்தைகள் பயனடைவர். மேலும், இக்குழந்தைகளைக் கவனிக்கத் தேவைப்படும் விளையாட்டு பொருட்கள், பொம்மைகள், தொட்டில்கள், சுத்தம் செய்யத் தேவையான பொருட்கள், கூடுதலான படுக்கைகள், போர்வைகள், குழந்தைகளுக்கான அடையாள அட்டைகள் ஆகியன வழங்கப்படும். இது தவிர, மழலையர் பராமரிப்பகங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இணை உணவு மற்றும் சத்துணவுடன், ஒரு நாளைக்கு, ஒரு குழந்தைக்கு 6 ரூபாய் செலவில் வருடத்தில் 300 நாட்களுக்கு, காலை உணவு, சிறு உணவு மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்படும்.

4. நான் முதன் முறையாக தமிழகத்தின் முதல்– அமைச்சராக பொறுப்பேற்ற 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்தவும் முதல்–அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கினேன். 1.8.2011-க்குப் பிறகு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, ஆண் குழந்தை இல்லாதிருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் ஆரம்ப வைப்பீடாக 50,000 -ரூபாயும், குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து, ஆண் குழந்தை ஏதும் இல்லாதிருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா 25,000- ரூபாயும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு, பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும் திரளான வட்டி விகிதத்துடன் கூடிய, நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை இரு திட்டங்களின் கீழ் முறையே 3 லட்சத்து 232 ரூபாய் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 117 ரூபாய் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டங்களின் கீழ், தொகை வைப்பீடு செய்யப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகை 1,800 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண் கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதற்கும், பெண் குழந்தைகளின் இடை நிறுத்தல் குறைந்துள்ளதற்கும், பெண் குழந்தை பாலின விகிதம் அதிகரித்துள்ளதற்கும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முக்கிய காரணியாக உள்ளது.

கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரிவோர், உணவகம், பெட்டிக்கடை நடத்துபவர்கள், தெரு வியாபாரிகள், தனியார் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றோர் மாத வருமானம் சுமார் 5000 ரூபாய் வீதம், ஆண்டு வருமானம் 60,000 ரூபாய் வரை ஈட்டும் சாதாரண பிரிவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், தற்போது நிர்ணயிக்கப்பட்ட திட்டம் -1–க்கான வருமான உச்சவரம்பு 50,000- ரூபாயயும், திட்டம்-2–க்கான வருமான உச்சவரம்பு 24,000- ரூபா யையும் அகற்றிவிட்டு, இரு திட்டங்களுக்கும் பொதுவாக 72,000- ரூபாய் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். இதற்காக 31 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மேற்காணும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், அவர்கள் அனைத்து வசதிகளையும் பெற்று ஊட்டச்சத்து நிறைந்தவர்களாக திகழவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்