முக்கிய செய்திகள்:
இலவச மடிக்கணினி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கிற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.இதில் பன்னிரெண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கும், சுயநிதிப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விலையில்லா மடிக்கணினி கிடைக்கப்பெறாத மாணவச் செல்வங்கள் தங்கள் கோரிக்கையினை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்திட 21.07.2014 அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்றனர்.அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, மாணவர்களின் மனம் புண்படும் வகையில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மாணவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து கிழித்துள்ளதோடு, பலமாகத் தாக்கியும் உள்ளனர்.

காவல்துறையினரின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று அரசு பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிட முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்