முக்கிய செய்திகள்:
குற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அருகில் கல்லூரி மாணவி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 கயவர்களால் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரம் தொடர்பான செய்திகள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன.

கிருஷ்ணகிரியிலிருந்து காவேரிப்பட்டினம் அருகிலுள்ள சொந்த ஊருக்கு வாடகை மகிழுந்தில் சென்ற மாணவியை, இராயக்கோட்டை அருகில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று இந்த வன்கொடுமையை செய்திருக்கிறது. மாணவியுடன் வந்தவர் இதை தடுக்க முயன்றபோது, அவரைத் தாக்கி கட்டிப் போட்டுவிட்டு கயவர் கும்பல் இரக்கமே இல்லாமல் மாணவியைச் சீரழித்துள்ளது. மிருகத் தனமான இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமின்றி தண்டிக்கத்தக்கவையுமாகும். மாணவியை சீரழித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு நீதிபதி வர்மா குழு பரிந்துரைப்படி உருவாக்கப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 2603 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன; 333 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு குழந்தையும், 3 பெண்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி சீரழிக்கப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு மாணவியும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இன்னொரு மாணவியும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் 2 குழந்தைகள் பள்ளி விடுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகும் மகளிர் விடுதிகள் கடைபிடிப்பதற்கான விதிகளைத் தான் தமிழக அரசு வகுத்ததே தவிர, மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் புனிதா என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வழக்கு முடங்கிக் கிடந்தது. அவ்வழக்கில் வாதாட, இரு தினங்களுக்கு முன்பு தான் தற்காலிகமாக ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், அலட்சியம் காட்டுவது தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம் ஆகும்.

மொத்தத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது பெரும் அவமானம் ஆகும். இனியாவது செய்யாத சாதனைகளைப் பாராட்டி வீண் விளம்பரம் செய்வதை விடுத்து தமிழகத்தில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்