முக்கிய செய்திகள்:
பிரணாப் முகர்ஜி திருச்சி வருகை

திருச்சி மாவட்டம் தூவாக் குடியில் உள்ள என்.ஐ.டி. 2013–14 ஆம் கல்வி ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகிறது.

1963–ம் ஆண்டில் பிரதமராக இருந்த நேரு நாடு முழுவதும் 15 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை தொடங்க உத்தரவிட்டார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் பெரு முயற்சியால் பெல் நிறுவனம் தொடங்கப்பட்ட 1964–ம் ஆண்டிலேயே துவாக்குடியில் மண்டல பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. 800 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட மண்டல கல்லூரியை அப்போதைய தொழில் துறை அமைச்சர் வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில் 120 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இந்த மண்டல பொறியியல் கல்லூரி கடந்த 2003–ம் ஆண்டு யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. ஒப்புதல் பெற்ற பின் தேசிய தொழில் நுட்ப நிறுவனமாக (என்.ஐ.டி.)உயர்ந்தது. அதன் பின்னர் இந்நிறுவனத்தில் முழு நிதியையும் மத்திய அரசே வழங்கி வருகிறது.

தற்போது 10 பி.இ., பி.டெக். பி.ஆர்க். உள்ளிட்ட இளநிலை பட்ட படிப்புகளுடன் எம்.டெக்., எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்., மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மேற்படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது. மத்திய சேர்க்கை கலந்தாய்வு வாரியம் மூலம் 50 சதவீதம் மாணவர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், 50 சதவீதம் பேர் தமிழகத்தில் இருந்தும் சேர்க்கை பெறுவதுடன் இந்தியா வம்சாவளி மாணவர்கள் தாசா திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறுகின்றனர்.

இதன் மூலம் 6 ஆயிரம் மாணவர்கள், 250 ஆசிரியர்கள், 400 பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் என்.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் டி.ஏ.ஏ.டி., மிடாக்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.

இந்த என்.ஐ.டி. (தேசிய தொழில் நுட்ப கழகம்) யின் பொன் விழாவில் கலந்து கொள்ளவும், தஞ்சையில் சாமி தரிசனம் செய்யவும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (19–ந்தேதி) காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு வருகிறார். அவரை தமிழக ஆளுனர்கள் ரோசய்யா, அமைச்சர்கள் பழனியப்பன், பூனாட்சி, கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்பட பலர் வரவேற்கின்றனர்.

இதை தொடர்ந்து தனி ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை செல்கிறார். இதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 3 ஹெலி காப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சையில் இறங்கும் அவர் குண்டு துளைக்காத காரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்.

பின்னர் அங்கிருந்து தஞ்சை விமானப்படை விமான நிலையத்துக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி துவாக்குடி என்.ஐ.டி. வளாகத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர் மாலை 4.15 மணிக்கு என்.ஐ.டி. பொன்விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மாலை 5.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

குடியரசு தலைவரின் வருகையையொட்டி மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரும் விமான நிலையம் மற்றும் என்.ஐ.டி. வளாகத்தில் திவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய மண்டல ஐ.ஜி. ராமசுப் பிரமணி, மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள், 6 ஏ.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 1500–க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரணாப் முகர்ஜி வருகைக்காக திருச்சி விமான நிலையம் மற்றும் என்.ஐ.டி. வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம் மற்றும் திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் போலீசார் வாகன ஒத்திகையிலும் ஈடுபட்டனர். மேலும் என்.ஐ.டி. வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு என். ஐ.டி. வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு போலீசாரும் தனித்தனியே சோதனை நடத்தி மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது. விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மேலும் செய்திகள்