முக்கிய செய்திகள்:
கொடுங்கையூர் காவல் நிலைய சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி

கொடுங்கையூர் காவல் நிலையத்தில், போலீஸ் காவலில் இருந்தபோது கோபால் என்பவர் இறந்தது குறித்து குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கை பெற்ற பின், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அவர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில், போலீஸ் காவலில் இருந்தபோது கோபால் என்பவர் இறந்தது குறித்து உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

15.7.2014 அன்று இரவு, பார்த்திபன் என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தன்னை மகேஷ் மற்றும் கோபால் ஆகியோர் கொடுங்கையூர் ஆர்.ஆர் நகரில் வைத்து தாக்கியதாக தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் பாண்டியராஜா, காவலர்களுடன் விரைந்து சென்று எழில் நகர் அருகில் இருந்த எதிரி கோபால் என்பவரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தார்.

16.7.2014 அன்று நடத்திய விசாரணைக்கு பின், காலை 11 மணியளவில் கோபாலை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்ல தயாரான நிலையில், அவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அசௌகரியமாக உள்ளதாகவும் தெரிவித்தார். உடனடியாக அருகிலுள்ள பவித்ரா என்ற தனியார் மருத்துவமனைக்கு காவல் துறையினர் அவரை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், கோபால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் அரசினர் ஸ்டான்லி மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக, கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜா கொடுத்த அறிக்கையின் பேரில், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவின்படி குற்றவியல் நடுவர் அவர்களுக்கு விசாரணை கோரி அனுப்பப்பட்டுள்ளது.

கோபால் மீது இரண்டு கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் 4 இதர வழக்குகள் வடசென்னை பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர் குற்ற கும்பலைச் சேர்ந்த பொக்கை ரவி மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகியவர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர். 2013 ஆம் ஆண்டு குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கோபால், சென்ற மாதம் வெளி வந்துள்ளார். வியாசர்பாடியை சேர்ந்த இறந்து போன கோபால் குறித்த சரித்திர பதிவேடு காவல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குற்றவியல் நடுவர் விசாரணை நிலுவையில் உள்ள இந்தச் சூழ்நிலையில், இந்தச் சம்பவத்தில், கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜா ஆகியோர் போலீஸ் காவலில் உள்ள கைதியை கையாளுவதில் தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளாமல் கவனக் குறைவாக இருந்தமைக்காக, தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் நடுவர் விசாரணை அறிக்கை பெற்ற பின், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், 2013 மற்றும் 2014-ல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறை விசாரணைக்கு வந்த போது அல்லது காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த போது மரணமடைந்த சம்பவங்கள் 20 ஆகும்.

மூன்று சம்பவங்களில் கையும் களவுமாகப் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குற்றவாளிகள், பிடிபடும் சமயத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்டு பிறகு காவல் நிலையத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் காவல் பாதுகாப்பில் இருக்கும் பொழுதோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுதோ இறந்துள்ளனர்.மேலும் நான்கு சம்பவங்களில், குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்தவர்கள் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின் மரணம் அடைந்துள்ளனர்.

மூன்று வழக்குகளில் விசாரணையில் இருக்கும் பொழுது குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு சம்பவத்தில் வழிப்பறிக் குற்றவாளியைக் கைது செய்ய முயற்சித்த காவல்துறையினரை அவர் அரிவாளால் தாக்க, தற்காப்பிற்காக பலப்பிரயோகம் செய்ய நேரிட்டபின் குற்றவாளி மரணமுற்றுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட பரிசு சீட்டு விற்பது குறித்து விசாரணை செய்யப்பட்ட நபர், காவல் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட பின் சில மணி நேரம் கழித்து இறந்துள்ளார்.வழிப்பறி செய்து கொண்டிருந்த நபரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடிக்கும் பொழுது அவர் தப்பி ஓட முயன்ற பிறகு மயக்கமுற்று மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துள்ளார்.மேலும் ஆறு சம்பவங்களில், காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைகளில் ஐந்து வழக்குகளில் மாரடைப்பு, வலிப்பினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்திலும் முறையாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதித்துறை நடுவர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பிரேத மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சம்பவங்களில் நோயின் காரணமாக அந்நபர்கள் இறந்து போனது தெரியவந்துள்ளது. எனினும், இச்சம்பவங்களின் போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தங்கள் பணியில் கவனக் குறைவாக இருந்த காரணத்திற்காக தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான வழக்குகளில் இறப்பிற்கு காவல்துறையினர் காரணமல்ல என நீதித்துறை நடுவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக காவல் துறையினர், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணையில் இருக்கும் போதும், அவர்களை வழிக்காவல் செய்யும் போதும், விழிப்புடன் இருந்து வருகின்றனர். சில சமயங்களில், எதிர்பாராத வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கும் நோயினால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலோ அல்லது மருத்துவமனையிலோ இறந்து விடுகிறார்கள்.

சில வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரோ அல்லது விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பின்னரோ, உடல் நலக்குறைவு காரணமாகவோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ உயிரிழந்து விடுகின்றனர். சிலர் நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் போது, உடல் நலக்குறைவால் இறந்துவிடுகின்றனர்.

இது போன்ற மரணங்களை காவல் நிலைய மரணங்கள் எனக் கூறுவது சரியாகாது. காவலில் இருக்கும்போது மரணம் ஏற்பட்டாலோ அல்லது மரணம் குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டாலோ, குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 176-(1-A)ன்படி நீதிமன்ற நடுவர் புலன் விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

குறைந்தபட்சம் இருவர் அடங்கிய மருத்துவக் குழுவினரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது. பிரேதப் பரிசோதனை வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதன் காரணமாக, இம்மரணங்கள் குறித்து நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுகிறது. அவ்விசாரணையின் முடிவில் காவல் துறையினர் மீது தவறேதும் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், சந்தேக நபர்கள் அல்லது எதிரிகளை காவல் நிலைய பாதுகாப்பில் வைத்திருக்கும் போது, அவர்களை விழிப்புடன் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசு, காவல்துறையினருக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அறிவுரைகளையும் வழங்கியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும் செய்திகள்