முக்கிய செய்திகள்:
அதிமுக எம்.எல்.ஏ. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

சட்டசபையில் உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜலட்சுமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மறை முகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்து பேசினார்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகளை பற்றி (தி.மு.க., தே.மு.தி.க.) கடுமையாக விமர்சித்தார். இதற்கு தி.மு.க., தே.மு.தி.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் ராஜலட்சுமி எம்.எல்.ஏ. அவரது பேச்சை தொடர்ந்தார். அப்போதும் கடும் விமர்சன சொற்கள் வந்ததால் தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் அவருக்கும் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தி.மு.க., தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமைச்சர்களும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பதிலுக்கு எழுந்து நின்றனர். இதனால் சபையில் பரபரப்பான நிலை காணப்பட்டது.

அப்போது சபாநாயகர் எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனாலும் அமளி நீங்க வில்லை.

துரைமுருகன் கூறுகையில், மானிய கோரிக்கை பற்றி பேசாமல் அந்த பெண் சகோதரி ஏதேதோ பேசுகிறார். இதுகுறித்து நாங்கள் கேட்பதில் என்ன தவறு என்றார்.

இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபையில் ஒரே அமளியாக இருந்ததால் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவையை நடத்த விடாமல் குந்தகம் செய்வதால் வெளியேற்றுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபைக்கு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. மானிய கோரிக்கை பற்றி பேசாமல் கொச்சையாக தி.மு.க.வை விமர்சித்து பேசினார். அதற்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் எம்.எல்.ஏ. இவ்வாறு பேசுவது நியாயமா? என்று துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அமைச்சர் வைத்திலிங்கம் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்.

இந்த அவையில் எதிர்க் கட்சிகளை மிக மோசமாக விமர்சிக்கிறார்கள். இதுபற்றி கேட்டதற்கு எங்களுக்கு அனுமதி மறுத்து எங்கள் உறுப்பினர் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க சொல்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் பேசுவது அவைக் குறிப்பில் இருக்கட்டும் என்றால் எந்த வகையில் நியாயம்? இதைக் கேட்டதற்கு எங்களை வெளியேற்றி விட்டனர்.

பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. ஆரம்பத்தில் தி.மு.க. கட்சியை விமர்சித்து விட்டு அதன் பிறகு கலைஞரையும், அவரது குடும்பத்து பிள்ளைகளையும் கேவலமாக விமர்சித்து பேசினார். எழுதி கொண்டு வந்ததை வைத்து படிக்கிறார். பொறுமை இழந்த நாங்கள் மானிய கோரிக்கை பற்றி பேசாமல் இப்படி பேசுவது நியாயமா? என்றோம். உங்கள் கட்சித் தலைவரை பெருமையாக பேசுவதை பற்றி தவறு இல்லை. எங்களை வம்புக்கு இழுத்து பேசுவது முறைதானா என்றோம்.

இதற்கு சரியான தீர்ப்பு சொல்ல வேண்டும் என்றோம். ஆனால் எங்களது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க சொல்கிறார். ஓடுகாலிகள் ஓடுகிறார்கள் என்ற வார்த்தையை ஏற்கனவே அமைச்சர் சொல்லி இருக்கிறார். அது அவைக்குறிப்பில் இருக்கிறது.

ஆனால் பெண் எம்.எல்.ஏ. விமர்சித்து பேசுவதை நாங்கள் கண்டித்த பேச்சை நீக்குவது நியாயமா?

35 ஆண்டு கால வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வை நாங்கள் கண்டதில்லை.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

மேலும் செய்திகள்