முக்கிய செய்திகள்:
சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

சட்டசபையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தில் புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க.) பங்கேற்று பேசினார். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தி.மு.க. தலைவர் பெண்களின் பாதுகாவலராக இருக்கிறார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வளர்மதி, தி.மு.க. உறுப்பினர் தவறான தகவலை கூறுகிறார். அவர்கள் கட்சியில் கூட பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை.

முதல்–அமைச்சர் அம்மா பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவரேதான் பெண்களின் பாதுகாவலராகவே உள்ளார் என்றார்.தொடர்ந்து பேசிய புஷ்பலீலா ஆல்பன், 2004–ல் சுனாமி ஏற்பட்டபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள் என்றார்.

அப்போது முதல்– அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசியதாவது:–

2004–ல் சுனாமி ஏற்பட்டபோது நான்தான் முதல்–அமைச்சராக இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு இடங்களில் சந்தித்து ஆறுதல் கூறினேன். உதவிகளை வழங்கினேன். ஆனால் அப்போது சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த தி.மு.க. தலைவர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டார். தொகுதி மக்களை கூட சந்திக்கவில்லை.

அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து அது குறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபாலிடம் அனுமதி கேட்டார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. தி.மு.க. வினர் தொடர்ந்து குரல் எழுப்பியதால் அ.தி.மு.க. வினரும் அதற்கு எதிராக குரல் எழுப்பினர். அதனால் சபையில் கூச்சல்– குழப்பம் நிலவியது.சுனாமி பிரச்சினை குறித்து தொடர பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் தி.மு.க.வினர் வெளி நடப்பு செய்தனர்.

பின்னர் அவையில் இருந்து வெளியேறிய பிறகு துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

சபையில் இந்த பிரச்சினை குறித்து தேவையில்லாமல் தி.மு.க. தலைவரைப் பற்றி அமைச்சரும், முதல்வரும் பேசினர். அதற்கு நாங்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு கேட்டபோது சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. எனவே சபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்றார்.

மேலும் செய்திகள்