முக்கிய செய்திகள்:
ரூ.15 கோடியில் 2 படப்பிடிப்பு தளங்கள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:

மனிதன் நாகரிகம் அடைந்து உருவாக்கிய படைப்புகளில் உன்னத கலைப் படைப்பாக திகழும் திரைப்படம் இன்றைய மனித வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தினைப் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காகவும், நலன்களுக்காகவும் நான் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளேன். நான் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்திட தமிழ்நாடு அரசின் சார்பாக, 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினேன்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 9 கோடியே, 50 லட்சம் ரூபாய் செலவில், உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் அதாவது, அனிமேஷன் அண்ட் விஷுவல் எபக்ட்ஸ் எனும் பாடப் பிரிவு தொடங்கப்பட்டு அங்கு மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்குள்ள முன் காண் திரையரங்கம், அதாவது ப்ரிவியூ தியேட்டர், நவீன வசதிகளுடன் 99 லட்சம் ரூபாய் செலவிலும், படப்பிடிப்புத் தளம் 1 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவிலும் புனரமைக்கப்பட்டன.திரைப்படத் துறையினர் நல வாரியத்தில் ஏறத்தாழ 20 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில். மாறி வரும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளால் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் அதிகரித்துள்ளதால், படப்பிடிப்புத் தளங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது என்றும், எனவே, புதிய படப்பிடிப்புத் தளங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் காலியாக உள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் புதிய படப்பிடிப்புத் தளங்கள் அமைவதன் மூலம் திரைப்படத் துறையினர் பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல், திரைப்படப் பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கும் இது பெரும் வாய்ப்பாகத் திகழும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்