முக்கிய செய்திகள்:
வேட்டிக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம்

வேட்டி அணிந்து சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார்.

வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்குக்குள் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் மறுத்தனர். பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வேட்டி அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது கிளப் விதிமுறை என்று கூறிய ஊழியர்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரும் வேட்டி அணிந்து வந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம், தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இன்று (திங்கள்கிழமை) சிறப்பு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர்.

தேமுதிக:

தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது, இந்தச் சம்பவம் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் டெல்லிக்கும், வெளிநாட்டுக்கும் வேட்டி, சட்டையில்தான் சென்றனர்.

நாடாளுமன்றத்துக்கு செல்லும் உறுப்பினர்களும் வேட்டி அணிந்தே செல்கின்றனர். எங்கும் வேட்டி அணிந்து செல்லும் நிலைதான் இருக்கிறது. எனவே, இதுபோன்ற சம்பவம் இனிமேலும் நடக்காமல் இருக்கும் வகையில் கிரிக்கெட் சங்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மு.க.ஸ்டாலின் (திமுக):

ஆங்கிலேயர்களை 67 ஆண்டுகளுக்கு முன்பே விரட்டிவிட்டோம். அதில் தமிழகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னையில் கிரிக்கெட் சங்கம் மட்டுமல்லாமல், ஜிம்கானா, போட் கிளப், எம்சிசி போன்ற கிளப்களிலும் வேட்டி அணிந்து செல்பவர்களை அனுமதிப்பதில்லை. வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக கோ-ஆப்டெக்ஸ் மூலம் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பு நீதிபதி கிருஷ்ணய்யருக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது அவர், வேட்டி அணிவதை பெருமையாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார். இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு):

தமிழர் கலாச்சாரம், பண்பாடு மீது கிரிக்கெட் சங்கம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்பதால் வேட்டி கட்டி வருபவர்களுக்கு தடை விதித்திருந்தனர். அந்த அவல நிலை இப்போதும் தொடர்வதை ஏற்க முடியாது. தேவைப்பட்டால் இத்தகைய விதிமுறையை ரத்து செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):

பெரியார், அண்ணா, ஜீவா போன்றவர்கள் வேட்டி அணிந்து ரஷ்யா சென்றபோது அவர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. கிரிக்கெட் சங்கத்துக்கு வேட்டி அணிந்து சென்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அனுமதி மறுத்திருப்பது தமிழ் பண்பாடு, கலாசாரத்தை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது வெட்கக் கேடானது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிநாத் (காங்கிரஸ்):

காமராஜர் வேட்டி அணிந்துதான் ரஷ்யாவுக்கு சென்றுவந்தார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்துக்கு வேட்டியில்தான் சென்றார். இப்பேரவையிலும் 99 சதவீதம் பேர் வேட்டி அணிந்துள்ளோம். நீதிபதிக்கு ஏற்பட்டது போன்ற அவல நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கணேஷ்குமார் (பாமக), கதிரவன் (அகில இந்திய பார்வர்டு பிளாக்), அஸ்லம் பாஷா (மனிதநேய மக்கள் கட்சி), தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோரும் இந்த சம்பவத்தை கண்டித்து பேசினர்.

இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி பேசும்போது, சென்னை மற்றும் பிற நகரங்களில் செயல்படும் சங்கங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தனியாரால் நடத்தப்பட்டு வருகின்றன. வேட்டி அணிந்து சென்ற நீதிபதிக்கு கிரிக்கெட் சங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்