முக்கிய செய்திகள்:
இலவச லேப்டாப் கேட்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட மாணவர்கள்

இலவச லேப்டாப் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று (07/7/2014)
நெல்லையில் முதன்மை கல்வி அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவில் பயிலும் மாணவர், மாணவிகள்உயர்கல்வி பயில வசதியாக இலவச லேப்டாப்வழங்கும்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. பிளஸ்2 முடித்து சான்றிதழ் பெற்றுச் செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் லேப்டாப் வழங்கப்படும் என முத்திரையிட்டு வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2 வருடங்களாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் அனைத்து பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தங்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மேல்நிலைப் பிரிவில் பயின்ற மாணவர், மாணவிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லேப்டாப் கிடைக்காததால் ஆவேசம் அடைந்த மாணவிகள் நேற்று (07/7/2014) காலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதுபோல் பாளையங்கோட்டை இக்னேசியஸ் பள்ளி மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் முதன்மை கல்வி அலுவலரை முற்றுகையிட்டு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மாணவர்கள் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதேபால் நெல்லை சாப்டர்மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர்கருணாகரனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இலவச லேப்டாப் கிடைக்காததால் மாணவ, மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் திகாரிகள் விளக்கம் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்