முக்கிய செய்திகள்:
நெல்லை : சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீது பெண் புகார்

எனது காரை பறித்து வைத்து கொண்டு கொலை செய்வதாக மிரட்டுகிறார் என்று சமக மாவட்ட செயலாளர் மீது நெல்லை ஆட்சியரிடம் பெண் புகார் செய்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மேலப்பாளையத்தை சேர்ந்த நூர்ஜகான் என்பவர் சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் பண்ணயார் மீது ஆட்சியர் கருணாகரனிடம் புகார் செய்துள்ளார்.

அவர் ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். என்னுடைய கணவர் இறந்து விட்டார். 2வது மகன் தனிக்குடித்தனம் சென்று வி்ட்டான். என்னுடைய  மூத்த மகன் பஷீர்மைதீன் திருமணமாகியும் என்னுடன் சேர்ந்து வாழ்ந்தான். அவன் பங்களாப்பா நகர் 1வது தெருவை சேர்ந்த அன்சாரி என்பவரிடம் ஒரு ஆம்னி காரை 1 லட்சத்து 95 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கினான்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 14ம்தேதி அவன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டான். அதன்பிறகு புகாரி என்பவர் என் வீட்டுக்கு வந்தார். அவர் நான் பசீர் மைதீனின் நண்பன். உங்கள் மகனின் காரை சுந்தர்ராஜ் என்பவர் வாங்க விரும்புகிறார். அவர் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவார் என்றார். அப்போது புகாரி சுந்தர்ராஜிடம் செல்போனில்பேசி என்னையும் பேசவைத்தார்.


அப்போது சுந்தர்ராஜ் நான் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இருக்கிறேன். காரை புகாரியிடம் கொடுத்து அனுப்புங்கள். நான் பார்த்து விட்டு பிடித்திருந்தால் உங்களிடம் இருக்கும் ஒரிஜினல் ஆர்சி புக்கை கொண்டு வந்து பணத்தை வாங்கி செல்லுங்கள் என்றார். நானும் வறுமையை நினைத்து புகாரியிடம்காரை கொடுத்து அனுப்பினேன்.

அதன்பிறகு பணத்தை தரவில்லை. பணத்தை கேட்ட போது என்னை அலைக்கழித்தார்கள். ஒரு கட்டத்தில் 50ஆயிரம் ரூபாய் தான் தருவேன். காரை தர முடியாது என்று சுந்தர்ராஜ் பண்ணையார் என்னை மிரட்டினார். அதுபற்றி நான் போலீசில் புகார் செய்தேன். ஆனால் புகாருக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. 


இந்நிலையில் நானும் எனது 2வது மகன் செய்ய தலி பாதுஷாவும் சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்றோம். அப்போது அங்கு சுந்தர்ராஜ் பண்ணையார் இரண்டு பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். நான் அவரிடம என் காரை தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு சுந்தர்ராஜ் பண்ணையார் உன்காரை தரமுடியாது. அதை கடத்தல் வேலைக்கு பயன்படுத்துகிறோம். உன்னால் முடிந்ததை பார் என்று கூறி என்னை கொன்று விடுவதாக மிரட்டினார். இதுபற்றி மேலப்பாளையம் புகார் செய்து நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்