முக்கிய செய்திகள்:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று (25-6-2014) தலைமைச் செயலகத்தில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 2 கோடியே 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 5 கோடியே 25 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய்த் துறையினருக்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை எளிய மக்களிடையே முறையாக கொண்டு சென்று அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் பாரம்பரியம் மிக்க வருவாய்த் துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய்த்துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக கூடுதல் வாகனங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தில், வட்டாட்சியர் அலுவலகம், குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகம், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் அலுவலகம், கோட்ட கலால் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் செயல்படும். இருக்கை வசதிகளுடன் கூடிய பார்வையாளர் அறை, குடிநீர் வசதி, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று வர சாய்தள மேடை போன்ற அனைத்து வசதிகளுடன் 2 கோடியே 48 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 2 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்; மதுரை மாவட்டத்தில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமயநல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளருக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடம்; தூத்துக்குடி மாவட்டத்தில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர், சோழபுரம் மற்றும் கயத்தாறு ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டத்தில் 61 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை ஆட்சியர்களுக்கான நான்கு குடியிருப்புகள்; கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 25 கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகக் கட்டடங்கள்; வேலூர் மாவட்டத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மூர்-I, அம்மூர்-II, பள்ளிகொண்டா மற்றும் கணியம்பாடி ஆகிய 4 கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகக் கட்டடங்கள்; விருதுநகர் மாவட்டத்தில் 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரையாம்பட்டி மற்றும் இ-குமாரலிங்கபுரம் ஆகிய 2 கிராம நிருவாக அலுவலர்களுக்கான அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 7 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் திரு. மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் திரு.பிரதீப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்