முக்கிய செய்திகள்:
சென்னை, கிண்டி : தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில், 54 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று(25-6-2014) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கென 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பயிற்சி வளாகம், 5 மாவட்ட தொழில் மையங்களுக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், 7 மாவட்ட தொழில் மையங்களில் 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

பரவலான வேலைவாய்ப்புகளுடன் உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியில் கணிசமான பங்களிப்பை நல்கி, மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல், போட்டித் திறனை மேம்படுத்துதல், திறன் வளர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை, கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் ஒன்று புள்ளி நான்கு ஏழு ஏக்கர் நிலப்பரப்பில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 768 சதுர அடி கட்டட பரப்பளவில், பசுமைக் கட்டடத்திற்கான சிறப்பு அம்சங்களுடன் 54 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 தளங்களுடன் கூடிய சிட்கோ எனப்படும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலக அடுக்குமாடி கட்டடத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்த இந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில், கூட்ட அரங்குகள், ATM வசதியுடன் கூடிய வங்கி, கண்காட்சிக் கூடம், உணவகம் ஆகியவையும், இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களில் தொழில் வணிக ஆணையர் அலுவலகமும், எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் சிட்கோ தலைமையகமும் செயல்படும்- இதர தளங்களில் அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் இடவசதி ஒதுக்கீடு செய்யப்படும் - இந்த அலுவலகக் கட்டடம் முழுமையாக குளிர்சாதன வசதி, இருபது நபர்கள் செல்லக் கூடிய 4 மின் தூக்கிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மழை நீர் சேகரிப்பு வசதி, 120 சீருந்து மற்றும் 600 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கென 20 ஆயிரத்து 882 சதுர அடி பரப்பளவில் தரைத் தளத்தில் சிறு கருத்தரங்க அறை, அலுவலர் அறைகள் மற்றும் முதல் தளத்தில் நூலகம், கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள், காணொலிக் காட்சி வசதியுடன் கூடிய கருத்தரங்க அறை, நவீன வகுப்பறை, குறுகிய காலப் பயிற்சி பெறுபவர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையில் 30 பேர் தங்கக் கூடிய விடுதிக் கட்டடம் உள்ளிட்ட வசதிகளுடன் 5 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பயிற்சி வளாகத்தினை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்ட தொழில் மையங்களுக்கு தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொழில் மையக் கட்டடங்கள்; கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்ட தொழில் மையங்களுக்கு தலா 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; என மொத்தம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 75 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கட்டடங்களை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் திரு. ப. மோகன், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகரன், தலைமைச் செயலாளர் திரு.மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் திருமதி.ஷீலா பாலகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் திரு கி. தனவேல், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மைச் செயலாளருமான திரு கி. ஸ்கந்தன், தொழில் வணிகத்துறையின் ஆணையரும், முதன்மைச் செயலாளருமான திரு. ஸ்வரண் சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்