முக்கிய செய்திகள்:
ஒன்பதாம் வகுப்பு பாடநூலில் வரலாற்றுப் பிழை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவிலும் போராட்டம் நடத்தியவர்களை சுதந்திர இந்தியாவின் தந்தையர்கள் எனப் போற்றி வணங்குகிறோம்.ஆனால், இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து மகாத்மா காந்தியுடன் கைகோர்த்து போராடி, அதன் விளைவாக தமது 18ஆவது வயதிலேயே வீரச்சாவடைந்த தமிழர் சாமி நாகப்பனின் வரலாறு தமிழக பாடநூல்களில் மறைக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 9 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத்திற்கான தமிழ் பாடநூலில் தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள் ஆகிய தலைப்புகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தமிழ் பெண்களை பற்றிய பாடங்கள் இடம்பெற்றிருக்கின்றன.நாட்டின் விடுதலைக்கு இவர்கள் ஆற்றிய பங்குகள் குறித்தும், செய்த தியாகங்கள் குறித்தும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் போராட்டத்திற்கு இருவரும் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், வரலாறு தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தான் வேதனையளிக்கிறது.

9ஆம் வகுப்பு தமிழ் பாடநூலின் 8 ஆவது பக்கத்தில் தொடங்கும் தில்லையாடி வள்ளியம்மை என்ற தலைப்பிலான பாடத்தின் 11 ஆவது பக்கத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி தில்லையாடி வள்ளியம்மை உயிரிழந்ததாகவும், இதனால் அவர் காந்தியடிகளின் அறப்போராட்டத்தில் முதல் களப்பலி என்று போற்றப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பிழையாகும்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மையின் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாச்சிதான். இதை தேசத் தந்தை மகாத்மா காந்தியே பல்வேறு கால கட்டங்களில் பதிவு செய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களைப் பாதிக்கும் வகையிலான திருமணப் பதிவுச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று 23.12.1913 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வள்ளியம்மை அங்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு 22.02.1914 அன்று தமது 17 ஆவது வயதில் காலமானார். இதுதான் தில்லையாடி வள்ளியம்மை குறித்து வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களாகும்.

ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து போராடி சிறையில் அடைக்கப்பட்ட சாமி நாகப்பன் என்ற இளைஞர், சிறைக் கொடுமைகள் காரணமாக அதற்கு முன்பே 06.07.1909 அன்று காலமானார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர் அனைவரும் தங்களின் பெயரையும், கைரேகையையும் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதற்கான சான்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்; அனைத்து இடங்களிலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள்; புதிதாக இந்தியர் எவரும் குடியேறக்கூடாது என்று 1906 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க டிரான்ஸ்வால் காலனி அரசு சட்டம் கொண்டு வந்தது.

இந்தியரின் கண்ணியத்தைக் குலைக்க வேண்டும் என்ற நோக்குடன் கொண்டு வந்த இச்சட்டத்தை ஏற்கக்கூடாது; அதை எதிர்த்து இந்தியர்கள் போராட வேண்டும் என்று காந்தியடிகள் அழைப்பு விடுத்தார். அதன்படி இச்சட்டத்தை ஏற்க மறுத்து நடந்த அறவழிப் போராட்டம் தான் உலகின் முதல் அறப்போராட்டமாக போற்றப்படுகிறது.

இந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக 21.06.1909 அன்று கைது செய்யப்பட்ட சாமி நாகப்பன் ஜோகனஸ்பர்க் சிறையில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டார். கடும் குளிரில் திறந்த வெளியில் தங்கவைக்கப்பட்டதால் கடுமையான நிமோனியா காய்ச்சலால் நாகப்பன் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தென்னாப்பிரிக்க அரசு கல் உடைத்தல் போன்ற கடுமையான பணிகளை வழங்கியது. இதனால் அவர் இறப்பின் விளிம்புக்கு சென்று விட்ட நிலையில் 30.06.1909 அன்று விடுதலை செய்யப்பட்டார். அடுத்த ஆறாவது நாளில் அதாவது 06.07.1909 அன்று சாமி நாகப்பன் 18 ஆவது வயதில் காலமானார். நாகப்பன் தான் விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலில் உயிர்த் தியாகம் செய்தவர் என்பதை தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் தமது பேச்சிலும், எழுத்திலும் பல்வேறு காலகட்டங்களில் பதிவு செய்திருக்கிறார்.

சாமி நாகப்பன் உயிரிழந்தபின் 15.07.1909 அன்று தென்னாப்பிரிக்க பிரதமருக்கு காந்தி எழுதிய கடிதத்தில், தமது அறப்போராட்டத்தின் முதல் களப்பலி நாகப்பன் தான் என்று குறிப்பிட்டுள்ளார். அறப்போராட்டத்தில் பங்கேற்று தமது மகன் கைது செய்யப்பட்டது பற்றி குறிப்பிட்ட காந்தியடிகள், "நாகப்பனின் தியாகத்துடன் ஒப்பிடும்போது என் மகனின் சிறைவாசம் பெரிதல்ல" என கூறியுள்ளார்.பின்னர், தமது சகோதரன் உயிரிழந்தது பற்றி இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, "நாகப்பன் உயிரிழப்பு ஏற்படுத்திய மனவலியுடன் ஒப்பிடும்போது என் சகோதரனின் மறைவால் ஏற்பட்ட வலி பெரிதல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது சென்னை (21.04.1915), மதுரை (26.03.1919), தூத்துக்குடி (28.03.1919), நாகை (29.03.1919) ஆகிய இடங்களில் பேசிய காந்தியடிகள், சாமி நாகப்பனின் தியாகங்களை புகழ்ந்து பேசியிருக்கிறார். நாகப்பனின் தியாகத்திற்கு இதைவிட பெரிய சான்று இருக்க முடியாது.

தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் போராட்டக் களத்தில் இறங்குவதற்கே மூல காரணமாக அமைந்தது நாகப்பன் படையாட்சியின் தியாகம் தான். அவ்வாறு இருக்கும் போது அறியாமையாலோ அல்லது திட்டமிட்டோ அவரது தியாகம் இருட்டடிப்பு செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை எவரும் மறுக்க முடியாது. அதேபோல் அவருக்கே முன்னோடியாக இருந்த சாமி நாகப்பனின் தியாகம் போற்றப்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு ஆகும்.

எனவே, 9ஆம் வகுப்பு தமிழ் பாடநூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுப் பிழை திருத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, காந்தியடிகளின் போராட்டத்தில் முதல் களப்பலியான சாமி நாகப்பன் படையாட்சியின் தியாக வரலாறு தமிழக பாடநூல்களில் பாடமாக வைக்கப்பட வேண்டும். நாகப்பனின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள் அரசின் சார்பில் போற்றப்பட வேண்டும். சாமி நாகப்பனின் அஞ்சல் தலை வெளியிடப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்