முக்கிய செய்திகள்:
ரெயில் கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்

ரெயில் கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விலைவாசி உயர்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமையும் என்று மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த சூழ்நிலையில், விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து வகுப்பு பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை 14.2 விழுக்காடும், சரக்குகளுக்கான ரெயில் கட்டணத்தை 6.5 விழுக்காடும் உயர்த்தியுள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

ஓர் ஆண்டிற்கு முன்பு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே நிதிநிலை அறிக்கையில், எரிபொருள் விலையுடன் இணைந்த பயணிகள் மற்றும் சரக்குகள் கட்டண உயர்வை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில், சரக்கு கட்டணங்களும், பயணிகள் கட்டணங்களும் பின்னர் உயர்த்தப்பட்டன. அதன் பின்னர், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரெயில்வே நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில், அனைத்து வகுப்பு பயணிகளுக்கான ரெயில் கட்டணத்தை 14.2 விழுக்காடும், சரக்குகளுக்கான ரெயில் கட்டணத்தை 6.5 விழுக்காடும் கடந்த மே 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகத்தால் மே 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

தற்போது, ரயில்வே துறைக்கான ஆண்டுச் செலவை எதிர்கொள்ள வேண்டுமென்றால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அறிவிக்கப்பட்டு, தேர்தல் காரணமாக திரும்பப் பெறப்பட்ட கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி, பயணிகளுக்காக கட்டணத்தை 14.2 விழுக்காடும், சரக்குகளுக்கான கட்டணத்தை 6.5 விழுக்காடும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசின் கொள்கைகளையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறதோ என்ற ஐயம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும், ஊழல் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததோடு மட்டுமல்லாமல், ரெயில்வே நிர்வாகத்திலும் பல குளறுபடிகள் ஏற்பட்டன என்பது உண்மை தான் என்றாலும், இந்த குளறுபடிகளை சரி செய்ய, பயணிகள் மற்றும் சரக்குகள் கட்டணத்தை உயர்த்தாமல், பிற வழிகளில் ரெயில்வே துறையின் வருவாயினை பெருக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய ரெயில் கட்டண உயர்வால், ரெயில்களில் பயணிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இது மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் விலையும், காய்கறி மற்றும் பழங்களின் விலையும் கடுமையாக உயரக்கூடும். நாட்டின் பணவீக்கம் இன்னமும் ஏறுமுகத்தில் இருக்கின்ற சூழ்நிலையில், இது போன்ற கட்டண உயர்வு பணவீக்கத்தை மேலும் உயர்த்த வழிவகுப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்