முக்கிய செய்திகள்:
உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க போராட்டக்குழு அறிவிப்பு ?

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு கூட்டமைப்பு தலைவர் ஆன்டன் கோமஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 1987 ஆண்டு முதல் 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். இது ஒரு மக்கள் போராட்டம். இதற்காக சல்லி காசு கூட வெளிநாடுகளில் இருந்து வாங்கியது இல்லை. எங்கள் போராட்டம் தமிழ்நாடு, கேரளா என்று விரிவடைந்தது. ராஜீவ்காந்தி அடிக்கல் நாட்ட முயன்றதை 5 முறை தடுத்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி ஆகியோர் அந்த கால கட்டத்தில் அடிக்கல் நாட்ட இருந்ததையும் தடுத்தோம். தற்போது எங்களது உண்மையான உணர்வுபூர்வமான மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் சில தகவல்கள் வெளியிடப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. கடந்த 3 ஆண்டுகளாக உதயகுமார் எங்களுடன் இணைந்து போராடி வருகிறார். இது உதயகுமார் மட்டும் தனித்து நடத்தும் போராட்டம் அல்ல. இப்போது அவரது தனிப்பட்ட பிரச்சினைகளை கிழப்பி எங்கள் போராட்டத்தை ஒடுக்க உளவுத்துறை முயற்சிக்கிறது. அது நடக்காது.

அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளுடன் உதயகுமார் தொடர்புடையவர் என்றும், அமெரிக்காவில் இருந்து அவருக்கு பணம் வந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது அவரது தனிப்பட்ட பிரச்சினை. அதில் தவறுஇருந்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை சந்திக்கும் வல்லமை அவரிடம் உள்ளது.3 ஆண்டுகளாக உதயகுமார் இடிந்தகரையில் இருந்த போது மக்கள் பணத்தைதான் போராட்டத்துக்கு செலவு செய்துள்ளோம். தயவு செய்து மக்கள் அடிப்படை தேவைகளான நிலம், நீர், காடு, மழை ஆகியவற்றை அழிக்க கூடாது என்று கூறுவதை வளர்ச்சிக்கு தடை என்று தவறாக புரிய வேண்டாம்.

மக்களை அழிக்கும் அணுஉலை வேண்டாம் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மத்திய மந்திரி பிரகாஷ் கடந்த சனிக்கிழமை மராட்டிய மாநிலம் சைதா புரியில் அணுஉலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் முறையிடப் போவதாக கூறி உள்ளார்.இது போன்றுதான் எங்களது போராட்டம் மக்கள் நலனை சார்ந்தது. அணுஉலை எதிர்ப்பு என்பது மக்களை பாதுகாக்கும் ஆயுதம். அதை மழுங்கடிப்பவர்கள்தான் அன்னிய சக்திகளுக்கு ஆதரவாளர்கள். எங்கள் பேராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்