முக்கிய செய்திகள்:
குடியரசு தலைவர் உரைக்கு ஜெயலலிதா வரவேற்பு

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

புதிய அரசின் முக்கியத்துவம் தரும் கொள்கைகள் குடியரசுத் தலைவர் உரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வாக்களிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உரை உள்ளது. அனைத்து துறைகளின் பிரச்சினைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி முறையை புதிய அரசு அங்கீகரிக்கும் என்பது பாராட்டுக்குரியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது வரவேற்கத்தக்கது. சில மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதில் எச்சரிக்கை தேவை.

நிதி வழங்கும் முன் அண்டை மாநிலங்களின பொருளாதார நிலையை கவனிக்க வேண்டும். மாநிலங்களின் ஒப்புதலுடன் சரக்கு வரி, சேவை வரி அமல்படுத்தப்படும் என்பது ஆறுதல் அளிக்கிறது. சேவை வரியை அமல் செய்வது தொடர்பாக தமிழகத்திடம் கருத்து கேட்க வேண்டும் என்று நான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன்.

உள்கட்டமைப்பு மற்றும் தொழில் ஊக்குவிப்புக்கு குடியரசுத் தலைவர் உரையில் சரியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காவல்துறையை நவீனப்படுத்த உரிய நிதியை ஒதுக்க வேண்டும். தேசிய கடல்சார் குழுமம் அமைக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த குழுமத்தில் கடலை ஒட்டிய மாநிலங்கள் இடம்பெற வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்