முக்கிய செய்திகள்:
இந்திய பிரதமர் இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சிங்களப் படையினரின் கொட்டம் அடக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ஒருபுறம் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதைப் போல நாடகமாடும் இலங்கை அரசு, இன்னொரு புறம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த 10 நாட்களில் 4 முறை மட்டுமே தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதில் இரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 3 முறை தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதைப் போல சிங்களஅரசு நாடக மாடினாலும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு திரும்பித் தர மறுப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு களைத்துவிட்ட தமிழக மீனவர்கள் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைத் தான் மலைபோல நம்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மட்டுமே முடியும் என்பது தமிழகத்தின் நம்பிக்கை ஆகும்.

எனவே, சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 82 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்