முக்கிய செய்திகள்:
மானாமதுரை எம்.எல்.ஏ மீது தாக்குதல்

மானாமதுரை அதிமுக முன்னாள் அவைத் தலைவரின் மகனால் வெட்டப்பட்டதாக கூறப்படும் மானாமதுரை எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க.வைச் சேர்ந்த குணசேகரன், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி சார்பில் கடந்த ஆண்டு ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்ட போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அவைத்தலைவர் தெய்வ சிகாமணி என்பவரது வீடும் இடிக்கப்பட்டது.

அப்போது, மானாமதுரை எம்.எல்.ஏ.வான குணசேகரன், தனது கட்சியினருக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதால், தெய்வ சிகாமணியின் மகன் யோகேஷ்வரன் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மானாமதுரை அண்ணா சிலை அருகே, எம்.எல்.ஏ. குணசேகரன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல், குணசேகரனை அரிவாளால் வெட்டியது. இதனைத் தடுக்க முயன்ற அவரது நண்பர்களும் தாக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த குணசேகரன், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யோகேஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குணசேகரனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்