முக்கிய செய்திகள்:
ராம்குமார் சிறையில் கொலையா அல்லது தற்கொலை !!!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிறையில் மின்சாரம் பாய்ந்த கம்பியைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்த கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விசாரணைக் கைதிகள் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்ததாக சிறைத்துறையினர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.மாலை 4.45 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிறைத்துறையினர் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தை உலுக்கியது. இதனையடுத்து விசாரணை தகவல்களின் அடிப்படையில் ராம்குமாரை நெல்லை மாவட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, சுவாதி கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராம்குமாரின் தந்தை இதனை தற்கொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை தேவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் ராம்குமார் மின்சார ஒயரை கடித்ததற்கான சிறையில் சக கைதிகள் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை.சிறைத்துறை கூடுதல் தலைமை இயக்குநர் விஜய்குமார் கூறும்போது, தற்கொலை முயற்சியை அடுத்து சிறை அதிகாரிகள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிறகு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் அப்போது நிலைமை மோசமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார், மேலும் “இந்த தீவிர முடிவுக்கு அவர் செல்ல வேண்டியக் காரணமான சூழ்நிலைகள் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

சுவாதி கொலை வழக்கு செய்தித் தொகுப்பு

1. ஜூன் 24 காலை 6.35 மணி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 2-வது நடை மேடையில் நின்றிருந்த இளம் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடுகிறார். தகவல் பரவ, முதல் தகவலாக இறந்துபோன அந்தப் பெண் சுவாதி (22), த/பெ. சந்தான கோபாலகிருஷ்ணன், கங்கை அம்மன் கோயில் தெரு, சூளைமேடு, சென்னை என்பதும் அவர் மகேந்திரா டெக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஊழியர் என்ற செய்தியும் கிடைக்கிறது.

2. அடுத்த நாள் (ஜூன் 25-ம் தேதி) ரயில்வே போலீஸார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேக நபரின் காட்சி சிக்குகிறது. அந்த புகைப்படத்தை போலீஸார் வெளியிட ஊடக கவனத்துக்கு வந்த புகைப்பட்டம் பொதுமக்கள் மத்தியில் வைரலாக பரவியது.

3.அடுத்த இரண்டு நாட்களுக்கு கொலையில் துப்பு துலங்காமல் ரயில்வே போலீஸார் திணற சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. வழக்கு விசாரணையில் ரயில்வே போலீஸுக்கும் தமிழக காவல்துறைக்கும் இடையே பிரச்சினை இருக்கிறதா என உயர் நீதிமன்றம் கண்டிப்பு காட்ட வழக்கு தமிழக காவல்துறையின் கைகளுக்கு மாறுகிறது. ஜூன் 27-ம் தேதி வழக்கு விசாரணை தமிழக காவல்துறையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

4. ஒரே ஒரு சிசிடிவி ஆதாரம் மட்டுமே என்ற நிலையில் தமிழக காவல்துறை விசாரணையை துவக்கியது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் சுவாதியின் உறவினர்கள், நண்பர்கள், பணியிடம் அவர் இதற்கு முன்னர் வேலை பயிற்சி நிமித்தமாக சென்றிருந்த பெங்களூரூ, மைசூரூ என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டது.

5. ஜூலை 1 வெள்ளிக்கிழமை சுவாதி கொலை நடந்து சரியாக ஒரு வாரம். அன்று இரவு 10.30 மணிக்கு நெல்லை மாவட்டம் டி.மீனாட்சிபுரத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸாரைக் கண்டதும் அவர்களை அச்சுறுத்துவதற்காக அந்த இளைஞர் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். அவரை மீட்டு போலீஸார் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

6.ஜூலை 2 ஆணையர் அறிவிப்பு- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் (24) என்பதை சென்னை காவல் ஆணையர் டி.ராஜேந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

7. சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்து பேட்டியளித்த காவல் ஆணையர் ராஜேந்திரன், இந்த வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றச்செயலலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கூட்டாளியாக யாரும் செயல்படவில்லை என்றார். இதன் பிறகு ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்...

8. செப்.18, ஞாயிற்றுக்கிழமை ராம்குமார் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இதன் காரணமாக உயிரிழந்ததாக சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்