முக்கிய செய்திகள்:
இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் காலமானார்.
சென்னை: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார், அவருக்கு வயது 84. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார், அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர், இந்நிலையில், 23/12/2014, செவ்வாய் கிழமை மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே. பாலசந்தர் காலமானார் அவருக்கு தற்போது திரையுலகினர் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு மூன்று வாரிசுகள், அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார் பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர், தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், 'நீர்க்குமிழி' தொடங்கி 'பொய்' வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார், அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார், 'பொய்', 'ரெட்டை சுழி' மற்றும் 'உத்தம வில்லன்' ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார், இதில் 'உத்தம வில்லன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலசந்தர், கே.பாலசந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர், நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர் இன்று அவர் நம்மிடையே இல்லை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலசந்தர் படிக்கும் போதே 1960-களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார், 'மேஜர் சந்திரகாந்த்', 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'மெழுகுவர்த்தி' மற்றும் 'நவக்கிரகம்' உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார் அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது, திரைப்படத் துறையில் அவர் 1965-ஆம் ஆண்டு நுழைந்தார், தன் முதல் படத்தில் நாகேஷை குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த அவரது 'நீர்க்குமிழி' அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது, அது முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார், அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது காதல் கதைக்கு இவரது இந்திப் படமான 'ஏக் துஜே கே லியே' ஒரு பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தது, தெலுங்கில் 'மரோசரித்ரா' என்ற படம்தான் இந்தியில் 'ஏக் துஜே கே லியே'-வாக மாறியது, தெலுங்கில் சரிதா நாயகியாக நடிக்க கமல்ஹாசன் நாயகன் இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார் தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கல்களைக் கடந்து சென்றது, சமரசமற்ற தன்மையில் அவரிடம் தனிச்சிறப்பான உத்திகள் பளிச்சிட்டது சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் வடிவ ரீதியில் ஒவ்வொரு விதமாகவும் அவர் படங்களை கொடுத்து வந்தார் பல படங்கள் சமூக-அரசியல் புலத்தை கதைக்கருவாக கொண்டது நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை முறை அவரது படங்களில் சிறப்பாக கையாளப்பட்டது, பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம், மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான் நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார், அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார் இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர், திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விவேக், பிரகாஷ் ராஜ், ஏ.ஆர். ரஹ்மான் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம், எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார் இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது, இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலசந்தர்.
மேலும் செய்திகள்