முக்கிய செய்திகள்:
பிரதமர் மோடியை அபோட் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அபோட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை இன்று சந்தித்து பேசுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

அதன்படி பிரதமர் மோடியை அபோட் இன்று சந்தித்து பேசினார். அப்போது கோட் ஒன்றை அபோட் பரிசாக வழங்குகிறார். அதே போல் பிரதமர் மோடியும் அபோட்டுக்கு பகவத் கீதை ஒன்றை வழங்குகிறார். அதன்பின் நீண்ட காலமாக காத்திருப்பில் இருந்த யுரேனிய ஒப்பந்தம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி அதை இறுதி செய்தனர். இது தொடர்பாக முறைப்படியான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே யுரேனிய ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்பட்டது. அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததையடுத்து யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா மறுத்து வந்தது. இந்நிலையில் அமைதிக்காக மட்டும் யுரேனியத்தை பயன்படுத்துவோம் என்று இந்தியா உறுதியளித்ததை தொடர்ந்து தற்போது யுரேனியத்தை வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு வர்த்தக மந்திரி ஆண்ட்ரூ ராப் கூறினார்.

மேலும் செய்திகள்