முக்கிய செய்திகள்:
ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை வந்தார்

2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அபோட் இன்று காலை மும்பை வந்தார்.

மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் 30 தொழில் அதிபர்கள் குழுவும் வந்தது.

மும்பை பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசும்போது, ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. இந்தியாவிடம் இருந்து சிலவற்றை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஒருவரையொருவர் பார்த்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார்.

பின்னர் அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதைதொடர்ந்து தொழில் அதிபர்களை சந்தித்தார்.இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட், பெர்ட லீ ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின்போது கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கரை ஆஸ்திரேலிய பிரதமர் சந்திக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அபோட் இன்று முழுவதும் மும்பையில் இருப்பார். நாளை அவர் டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அணுசக்தி, தொழில், வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஒப்பந்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அபோட் நாடு செல்லும் வழியில் மலேசியா செல்கிறார். அந்நாட்டு பிரதமரை 6–ந் தேதி சந்திப்பார்.

 

 

மேலும் செய்திகள்