முக்கிய செய்திகள்:
கேரள முதல்வரிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் மனோஜ் என்பவர் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதேபோல் பல்வேறு அரசியல் கொலைகள் நடந்திருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கேரளாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது குறித்து ஆலேசனை நடத்தினார்.

மேலும், அத்தகைய கொலைகள் கவலை அளிப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், அரசியல் கொலைகளை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.அப்போது, மனோஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்திருப்பதாக உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும், அரசியல் கொலைகள் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்