முக்கிய செய்திகள்:
ஆசிரியர் தினம் என்ற பெயரை மத்திய அரசு மாற்றவில்லை: மத்திய மந்திரி அறிவிப்பு

மத்திய அரசு ஆசிரியர் தினம் என்ற பெயரை மாற்றவில்லை. அன்று குரு உத்சவ் என்ற பெயரில் கட்டுரை போட்டி தான் நடைபெறும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடுவார். அதனை அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி அல்லது இணையதளம் மூலமாக பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய பள்ளிக்கல்வி வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

குரு உத்சவ் என்று பெயரை மாற்றுவது சமஸ்கிருதத்தை திணிக்கும் செயல் என்று இதற்கு காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

அதேபோல நரேந்திர மோடியின் பேச்சை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறப்பட்டதற்கு மேற்கு வங்காளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கான வசதிகளை செய்வதற்கு எங்களுக்கு குறைந்த கால அவகாசமே இருக்கிறது. மேலும் பள்ளி நேரத்திலும் அன்று சில மாறுதல்கள் செய்ய வேண்டியுள்ளது என்று அந்த மாநில கல்வி மந்திரி பார்தா சட்டர்ஜி கூறியிருந்தார்.

மத்திய அரசின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு ஏற்பட்ட அவப்பெயரை மறைக்க நேற்று இரண்டு முறை பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினம் என்ற பெயரில் கொண்டாடுவதை மத்திய அரசு மாற்றவில்லை. அன்றைய நாளில் ஆசிரியர்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையில் குரு உத்சவ் என்ற பெயரில் கட்டுரை போட்டி தான் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர்கள் போற்றப்படக் கூடியவர்கள் என்று கூறுவதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் நான் வருத்தமடைவேன். என்னை திகைப்படையச் செய்தது என்னவென்றால் சிலர், சமூகத்தின் முக்கிய அடித்தளமான ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை எதிர்ப்பது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்