முக்கிய செய்திகள்:
ஏழை மக்களுக்கான வங்கி கணக்குகள் 2.14 கோடியை எட்டியது: அருண் ஜெட்லி பெருமிதம்

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

30 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் கூட்டணி அல்லாத ஒற்றைக் கட்சி அரசாங்கத்தை பெற்றுள்றதால் கொள்கை அளவில் முடிவெடுப்பது எளிதாக உள்ளது. வரி பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு அமைப்பை உருவாக்கியுள்ளோம். காப்பீடு விஷயத்தில் உறுதியான முடிவை எடுத்துள்ளோம். காப்பீட்டு மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.

தொடர் நடவடிக்கைகளால் பாதுகாப்புத்துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது முதலீட்டுக்கான மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உற்பத்தி, சேவைத் துறைகளில் மந்தநிலை மாறி வளர்ச்சி அதிகரித்துள்ளது. வரும் காலாண்டிலும் அரசின் நீண்ட கால கொள்கைகளின் தாக்கம் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்.

ஜன் தன் திட்டத்தின்படி ஒரு கோடி வங்கி கணக்குகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், இன்று பகல் நிலவரப்படி 2.14 கோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் காலாண்டில் ஏற்பட்டுள்ள 5.7 பொருளாதார வளர்ச்சி ஊக்கம் ஊட்டும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்